ARTICLE AD BOX
- எஸ். சந்தர்
எப்போதும் எந்நேரமும் யாராவது கைப்பேசியில் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த கடன் கொடுக்கட்டுமா, அந்த பொருளை வாங்குகிறீர்களா, இந்த வேலை செய்கிறீர்களா, அந்த இல்லத்திற்கு நன்கொடை வழங்குவீர்களா, இந்த இடத்தை வந்து பார்ப்பீர்களா என்று தொடர்ந்து வரும் அழைப்புகள், நேரம் காலம் சூழல் கருதாமல் வந்து மக்களைச் சங்கடப்படுத்துகின்றன. இவற்றின் எண்ணிக்கையும் கூடி எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
அறிமுகம் இல்லாத இவர்களுக்கு அழைக்கும் நபரின் தொடர்பு எண் எப்படிக் கிடைக்கிறது? அவர் அந்த அழைப்பை ஏற்கும் சூழலில் தேவையில் இருக்கிறாரா என்பதை யார் முடிவு செய்கிறார்கள்? எப்படி எதன் அடிப்படையில் தேர்வு செய்து அழைக்கிறார்கள்? இது தனிமனித நேரச் சுதந்திரத்திற்கு எதிரானது இல்லையா? இப்படிக் கூப்பிடும் ஒருவரோ நிறுவனமோ இதனை உணர்கிறதா? இவர்களுக்கு இந்த அனுமதியை யார் கொடுத்தது?
பெரும்பாலும் இந்த அழைப்புகள் ஒருவர் முக்கியமான வேலைகளில் ஈடுபட்டு இருக்கும் போது உபத்திரவமாகத்தான் வருகிறது. இரு சக்கர வாகனம் ஓட்டும்போது, சாப்பிடும் போது, வீட்டிலோ அலுவலகத்திலோ முக்கியமான அலுவலில் முனைத்து ஒருங்கிணைத்து ஈடுபட்டு இருக்கும் போது, சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் போது...
இவை பெரும்பாலும் பெண் குரல்களிலும் வேற்று மொழிகளிலும் கரகரத்த அல்லது கத்தும் தொனியிலும் தான் இருக்கிறது. பேசுபவரின் பரபரப்பு கேட்பவரை மேலும் எரிச்சல் பட வைக்கிறது. இவற்றில் எவை உண்மையான அழைப்புகள் எவை போலியானவை என்றும் வகைப்படுத்துவது கடினம். போலி ஏமாற்று அழைப்புகளை பெரும்பாலும் ஏமாந்த பிறகே உணர்கிறோம்.
அலுவலகம் கிளம்பும் தறுவாயில் ஒரு அழைப்பு வந்து, ஒருவரது வங்கி அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி விட்டதாகவும் அடுத்த சில மணிநேரங்களில் செயலிழக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் ஆண் குரல் ஆங்கிலத்தில் கரகரத்துக் கூறினால் படபடக்காமல் என்ன செய்வது.
அலுவலகம் கிளம்பும் அவசரத்திலும், வங்கி அட்டையின் அவசியம் கருதியும் சம்மதித்து அணைத்து விவரங்களையும் தருமி கேட்கப் புலவர் பதில் சொல்வது தான் நிகழும். சுதாரித்து முழிப்பதற்குள் முழு விவரமும் பகிரப்பட்டுச் செய்வது அறியாமல் நிலைகுலைவு ஏற்படும். மிரட்டும் குரலும் அடிபணியாமால் போனால் நிகழ்வதாக சொல்லும் விளைவுகளும் ஏற்படுத்தும் அச்சமும் சிந்திக்க முடியாமல் மகுடி பாம்பாய் ஆடவைக்கும்.
வங்கிக்கு புகார் கொடுத்தாலும் சொல்பவரை ஜாக்கிரதையாக இருக்க சொல்லி எச்சரிப்பர்களேயன்றி நடவடிக்கை எடுப்பதில்லை.
வங்கிக்கடன் கொடுப்பதாகவும், ஏழைகளுக்கு உதவி புரிவதாக சொல்லி நன்கொடை கேட்டும், தங்க நகைகளை அடமானம் வைக்க கோரியும் வீட்டு மனை வாங்க அழைத்தும் பொருட்களை இலவசமாகவோ பாதி விலையிலோ வழங்குவதாக சொல்லியும், வீட்டிலிருந்தே வேலை செய்து பல கோடி சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டியும், நிறுவனங்களில் முகவர்களாக சேரும் படி வற்புறுத்தியும், உல்லாச சுற்றுலா இலவசமாக அழைத்து செல்வதாக ஆசை காட்டியும் எத்தனை விதமான அழைப்புகள்... இவற்றில் ஒன்று இல்லையென்றால் மற்றொன்றில் சபலம் ஏற்பட்டு சிக்குவது எல்லோருக்கும் சாத்தியமே.
இவற்றில் எவை நேர்மையான அழைப்புகள் என்பதை அறிய முடிவதில்லை. எதனால் இப்படிப்பட்ட சலுகைகள் தருகிறார்கள் என்றெல்லாம் யோசித்து பதில் சொல்லும் அவகாசத்தை அவர்கள் கொடுப்பதில்லை. உடனே பதில் சொல்லவும் இல்லை என்றால் இந்த சலுகை கிடையாது என்றும் மிரட்டுகிறார்கள்.
உண்மையான சேவை நோக்கம் இருந்தால் இப்படி கூப்பிடும் அலுவலகங்கள் முதலில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி தேவையிருந்தால் அழைக்கவும் என்று எண்ணை பகிரலாம். தேவையானவர்கள் அழைக்கும்போது நிதானமாக அவர்கள் தேவை அறிந்து உதவலாம். அடுத்தவர் நிலை அறியாது சகட்டுமேனிக்கு அழைப்பது எரிச்சலையும் அழைக்கும் நிறுவனத்தின் மீது வெறுப்பையும் தான் சம்பாதிக்கும்.
அதே சமயம் ஒரு வங்கியோ சேவை நிறுவனமோ நம் தேவை கருதி அழைத்தால் எண்களை மாற்றி மாற்றி அழுத்தச்செய்து, ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு எரிச்சல்அடைய செய்கிறார்கள். வங்கி/நிறுவன அலுவலருடன் பேசவே பிரம்மபிரயர்த்தனம் தேவைப்படுகிறது. இந்த தேவையற்ற அழைப்பு விடுக்கும் நபர்களை அந்தப்பிரிவில் பணியமர்த்தி சேவை செய்யலாமே. ஒரு நிறுவனத்திற்கு அழைப்பு மேற்கொண்டால் அலுவலர் வழிநடத்தினால் நம்பிக்கையும் கூடும் தீர்வும் கிடைக்கும். அது தானே உண்மையான வாடிக்கையாளர் சேவை?
'AI எல்லாம் வரப்போகிறது, எல்லாமே தானியங்கிதான். சேவையாது சேமியாவாவது' என்று யாராவது சொன்னால் அதனையும் ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது.