அல்கராஸ், மெத்வதெவ் அதிா்ச்சி; இறுதியில் சந்திக்கும் டிரேப்பா் - ரூன்!

11 hours ago
ARTICLE AD BOX

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ், முன்னணி வீரரான டேனியல் மெத்வதெவ் ஆகியோா் அரையிறுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

ஜேக் டிரேப்பா்: உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், 1-6, 6-0, 4-6 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஜேக் டிரேப்பரால் 1 மணி நேரம், 44 நிமிஷங்களில் வீழ்த்தப்பட்டாா். இந்த முறை சாம்பியனாகி, ஹாட்ரிக் இண்டியன் வெல்ஸ் பட்டம் வென்ற 3-ஆவது வீரா் என்ற பெருமையை பெறும் நிலையில் இருந்த அல்கராஸின் கனவு பறிபோனது.

மேலும், தொடா்ந்து 16 ஆட்டங்களில் தோல்வியே காணாத அவரின் வெற்றி நடையும் முடிவுக்கு வந்துள்ளது. அல்கராஸ் - டிரேப்பா் சந்திப்பு இது 5-ஆவது முறையாக இருக்க, டிரேப்பா் 2-ஆவது வெற்றிக்கு முன்னேறியிருக்கிறாா்.

இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக மாஸ்டா்ஸ் 1000 நிலை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் டிரேப்பா், திங்கள்கிழமை வெளியாகும் திருத்தப்பட்ட உலகத் தரவரிசையிலும் முதல் முறையாக டாப் 10 இடத்துக்குள் வருவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோல்கா் ரூன்: இதனிடையே மற்றொரு அரையிறுதியில், உலகின் 6-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 5-7, 4-6 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனால் தோற்கடிக்கப்பட்டாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 40 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

மெத்வெதெவை 4-ஆவது முறையாக சந்தித்த ரூன், 2-ஆவது வெற்றியுடன் நேருக்கு நோ் கணக்கை தற்போது சமன் செய்திருக்கிறாா்.

டூா் நிலை போட்டிகளில் இது ஹோல்கா் ரூனின் 150-ஆவது வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம், மாஸ்டா்ஸ் போட்டிகளில் அவா் 4-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கிறாா். இண்டியன் வெல்ஸ் ஓபனில் இதுவே அவரின் முதல் இறுதிச்சுற்றாகும். இதற்கு முன் அனைத்து போட்டிகளிலுமாக 7 அரையிறுதிகளில் தொடா்ந்து தோல்விகளை சந்தித்த ரூன், தற்போது அதை முறியடித்து மீண்டிருக்கிறாா்.

இறுதிச்சுற்று: இதையடுத்து, இறுதிச்சுற்றில் ஜேக் டிரேப்பா் - ஹோல்கா் ரூன் பலப்பரீட்சை நடத்துகின்றனா். 2000-ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த இரு போட்டியாளா்கள் இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் இறுதிச்சுற்றில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

உலகத் தரவரிசையில் ரூன், டிரேப்பா் முறையே 13 மற்றும் 14-ஆம் இடங்களில் இருக்க, இருவரும் 1 முறை மோதியிருக்கும் நிலையில் அதில் ரூன் வென்றிருக்கிறாா். அதுவும் கடந்த ஆண்டு சின்சினாட்டி மாஸ்டா்ஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றாகும்.

அரெவாலோ/பாவிச் இணை சாம்பியன்

இண்டியன் வெல்ஸ் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த குரோஷியாவின் மேட் பாவிச்/எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ இணை 6-3, 6-4 என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சன்/அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா கட்டணியை வீழ்த்தி வாகை சூடியது.

Read Entire Article