ARTICLE AD BOX
தினம் ஒரு குட்டிக்கதை :–
உயிர் தேடும் உறவு!
கூடத்தில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம், 10 முறை அடித்து ஓய, மணி, 10:00 ஆகி விட்டதை, படுக்கையில் இருந்தபடியே உணர்ந்தாள், ஜெயம்.
இரவெல்லாம் முழங்கால் வலி. அதிகம் உழைத்து உழைத்து, எலும்புகள் தேய்ந்து விட்டன. வாழ்வின் கடைசி படிகளில் இதெல்லாம் சகஜம்தானே!
வெளியே பேச்சு சத்தம் கேட்டது.
”ஜெயம் பாட்டி இன்னுமா படுத்திருக்காங்க… இன்றும் சாப்பிட வரலையோ!”
”ராத்திரி துாக்கமில்லாததால், பசியில்லைன்னு சொல்லி ஒரு டம்ளர், ‘ஹார்லிக்ஸ்’ மட்டும் குடிச்சாங்க… துாங்கறாங்க போலிருக்கு.”
”சரி சரி… துங்கட்டும்… இப்ப எழுந்து என்ன செய்ய போறாங்க,” முதியோர் இல்லத்தில் வேலை செய்வோர் பேசுவது, அவள் காதில் விழுந்தது.
‘சந்துரு கண்ணா… ‘ஸ்கூல்’ விட்டு வந்தாச்சாப்பா… அம்மா, உனக்கு சூடா பஜ்ஜி போட்டு தரலாம்ன்னு வாழைக்காய் வாங்க கடைக்கு போனேன்… உள்ளே வாப்பா…’ என்றாள்.
பூட்டியிருந்த கதவு முன் உட்கார்ந்திருந்த மகனை, உள்ளே அழைத்துப் போனாள், ஜெயம்.
‘என்னங்க… காரக்குழம்பு வச்சிருக்கேன், சந்துரு சரியா சாப்பிட மாட்டான்; அவனுக்கு ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கி வர்றீங்களா…’ என்றாள்.
‘காய்ச்சல் வந்து, மூணு நாள் படுக்கையில இருந்தது, நீயா, உன் மகனான்னு தெரியலை… முகமெல்லாம் சோர்ந்து, கண்ணெல்லாம் உள்ளே போயிருச்சு… போய் குளிச்சுட்டு, வயிறு நிறைய சாப்பிடு ஜெயம். மகனுக்காக நீ பட்டினி கிடக்கிற…’ என்ற கணவனை பார்த்து, பதில் இல்லாமல் புன்னகைத்தாள், ஜெயம்.
’சந்துரு, லட்சணமாக, கம்பீரமா இருக்கான்… அவனுக்கேத்த மாதிரிபெண் தேடனுங்க…’ வலைவீசி தேடி, மருமகளை அழைத்து வந்தாள்.
டாக்டர்கள் கைவிரிக்க, படுக்கையில் இருக்கும் கணவன் அருகில், கண்ணீர் மல்க உட்கார்ந்திருந்தாள், ஜெயம்.
‘என்னங்க பார்க்கறீங்க… என்னை தனியா விட்டுட்டு போகப் போறோமேன்னு நினைக்கிறீங்களா… விதி, உங்களை என்கிட்டே இருந்து பிரிக்கப் பார்க்குது… நீங்க இல்லாமல் நான் மட்டும் எப்படிங்க இருப்பேன்… கூடிய சீக்கிரம் நானும் வந்துருவேங்க…’
கண்களில் கண்ணீர் வழிய, ‘நம் மகன், சந்துரு இருக்கான்… என் காலம் முடியும் வரை நல்லபடியாக பார்த்துப்பான்…’ அவர் கரங்களை பிடித்து, நம்பிக்கை தந்தாள்.
‘இரண்டு வயசு குழந்தையை பார்ப்பேனா… உங்களை பார்ப்பேனா… இல்லை, உங்க அம்மாவுக்கு பணிவிடை செய்வேனா… என்னால முடியலை… எங்க வீட்டுல இருக்கிற வரை, ராணி மாதிரி வாழ்ந்தேன். இங்கே, ஒரு வேலைக்காரியாய், கேவலமா வாழ வேண்டியிருக்கு… எல்லாம் என் தலையெழுத்து…’
மருமகளின் வார்த்தைகள், மகனின் முகவாட்டம், வீட்டின் நிம்மதியில்லாத சூழல். ஒரு முடிவுக்கு வந்தவளாய், ‘சந்துரு… என்னால எந்த பிரயோசனமும் இல்லைப்பா… உன் மனைவிக்கு சிறு உதவி கூட செய்ய முடியலை… மேற்கொண்டு குழந்தையோடு என்னையும் பார்த்துக்க சிரமப்படறா… அதனால…’ அவள், வார்த்தையை முடிக்கும் முன்…
‘அதான்மா நானும் யோசித்தேன்… உன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்திடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்… உனக்கும் நிம்மதி, எனக்கும் நிம்மதி… என்னம்மா சொல்ற…’ என்றான்.
மறு பேச்சு போசமல் கிளம்பினாள்.
மாதம் ஒரு தடவை வந்து பார்த்தவன், பின், ஆறு மாதம், ஓராண்டு என்று, வருவது நின்றே போனது.
எட்டு ஆண்டுகள்… இந்த இல்லத்தில் தான் ஜெயந்தியின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. கணவனை தேடி செல்லும் நாளுக்காக காத்திருந்தாள்.
”ஜெயம் பாட்டி… துாங்கறீங்களா?”
மெல்ல கண்களை திறந்து, ”இல்லம்மா… ஏதோ பழைய நினைவுகளோடு, கண் மூடி படுத்திருக்கேன்.”
”உங்களை பார்க்க, ‘விசிட்டர் ஹாலில்’ யாரோ வந்திருக்காங்க… மெல்ல எழுந்து போய் பாருங்க பாட்டி.”
‘
என் மகன் சந்துரு வந்திருக்கானா… அவனை பார்த்து, ஆறு ஆண்டுக்கு மேலாகி விட்டதே… இதோ, இன்று என் மகன், இந்த தாயை தேடி வந்து விட்டான்…’ மெல்ல எழுந்து, ‘வாக்கிங் ஸ்டிக்’ உதவியோடு நடக்க துவங்கினாள்.
அங்கு உட்கார்ந்திருப்பவர், இதுவரை பார்த்திராத முகம்… யாராக இருக்கும்… அவன் அருகில் உட்கார்ந்திருக்கும், 10 வயது சிறுவன்… அப்படியே சந்துருவின் முகஜாடையில்…
‘
இவன், என் பேரன்…’ மனமும், உடலும் பரபரக்க, இவள் மன வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், கால்கள் ஒடுங்க…
துாரத்திலிருந்து பார்த்தவன், ஓடி வந்து, ”பாட்டி!” கால்களை கட்டிக் கொண்டான்.
”என் தங்கமே… ராஜா… நல்லா இருக்கியாப்பா,” நடுங்கும் கைகளால் அரவணைத்து, முத்த மழை பொழிந்தாள்.
”பாட்டி… இவர், என், ‘டியூஷன்’ சார்… இவர் தான், என்னை இங்கே அழைச்சுட்டு வந்தாரு.”
அவள் அருகில் வந்தவர், ”வணக்கம்மா… நான், உங்க மகன் இருக்கும் தெருவில், நாலு வீடு தள்ளி இருக்கேன்…
என்னிடம், ‘டியூஷன்’ படிக்க வருவான், விக்னேஷ்… அவன், உங்களை பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டான்… அவனோட அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் அழைச்சுட்டு வந்தேன்.”
”ஆமாம் பாட்டி… நான் எத்தனையோ முறை அப்பாகிட்ட, ‘எனக்கு, பாட்டி இருக்காங்கன்னு சொல்ற, அவங்க ஏன் நம்மோடு இல்லை… என்னை அவங்ககிட்டே கூட்டிட்டு போப்பா’ன்னு கேட்டிருக்கேன்…
”இங்கே பாரு… உனக்கு பாட்டி இருக்காங்கன்னு சொன்னதே தப்பா போச்சு போலிருக்கு… அவங்க இங்கே வாழ்ந்த காலம் முடிஞ்சாச்சு… எதுக்கும் பிரயோசனமில்லாம, பிரச்னைகளை வரவழைச்சுட்டு இருந்தாங்க… அதான், அவங்க நிம்மதியா இருக்கட்டும்ன்னு முதியோர் இல்லத்துக்கு அனுப்பிட்டேன்…
”இப்படியெல்லாம் கேட்டு பிடிவாதம் பண்ணக்கூடாது… அப்பாவை தொந்தரவு பண்ணாம போய் விளையாடுன்னாரு… அதான், ‘டியூஷன்’ சார்கிட்ட கேட்டேன்,” என்றான், விக்னேஷ்.
”உங்க பேரன் என்னிடம், ‘அவங்க, என் அப்பாவுக்கும் அம்மாதானே சார்… பெரியவங்களை மதிக்கணும், அன்பா இருக்கணும்ன்னு சொல்லி தர்றீங்க… ஆனா, அந்த புத்திமதி, அறிவுரை சின்னவங்களுக்கு மட்டும் தானா’ன்னு கேட்டான்மா… எனக்கு பதில் சொல்லத் தெரியலை… பேரன் சார்பா, உங்க மகன்கிட்ட பேசி பார்த்தேன்.
‘
’அதற்கு அவர், ‘வேண்டாம் சார்… இவன் ஆசைப்படறான்னு நான் அழைச்சுட்டு போக, வீட்டில் பிரளயமே வந்துடும்… ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், எங்களுக்காக பாடுபட்டாங்க… அதையே நினைச்சுட்டிருந்தா, என் வாழ்க்கை என்னாகிறது… அவங்க காலம் முடிஞ்சாச்சு… எங்கேயோ நிம்மதியா வாழ வச்சுட்டுதானே இருக்கேன்… சின்ன பையன், மறந்துடுவான். விடுங்க சார்…’ என்றார்.
”அதற்கப்புறம் தான், விக்னேஷ் என்கிட்ட, ‘சார்… எனக்காக ஒரே ஒருமுறை பாட்டிகிட்ட அழைச்சுட்டு போங்க… நான், அவங்களை பார்க்கணும்… வீட்டுல சொல்ல மாட்டேன் சார்…’ என்றான். உங்க பேரனுக்காக… அந்த பிஞ்சு மனம் ஏமாறக்கூடாதுன்னு அழைச்சுட்டு வந்தேன்மா…” எனக் கூறினார், ‘டியூஷன்’ சார்.
பேரனை அருகில் உட்கார வைத்து, அவன் கன்னத்தை அன்போடு வருடினாள், ஜெயம் பாட்டி.
”இந்த பாட்டியை பார்க்கணும்ன்னு, அவ்வளவு ஆசையா ராஜா!”
”நீங்க எங்க குடும்பத்தை சேர்ந்தவங்க பாட்டி… இப்ப, உங்களால பிரயோசனமில்லாமல் இருக்கலாம். இருந்தாலும், நீங்கதானே அப்பாவுக்கு எல்லாமா இருந்திருப்பீங்க… இது ஏன் அவங்களுக்கு புரியலை… நான் பெரியவனானதும், வந்து உங்களை கூட்டிட்டு போறேன் பாட்டி.”
பேரனை கண்ணீருடன் அணைத்தவள், வாய் வலிக்க பேசினாள்.
நேரம் நிமிடமாய் கரைய, ”சரிம்மா… நாங்க கிளம்பறோம்… நேரமாயிடுச்சு!” என்றார், ‘டியூஷன்’ சார்.
”ரொம்ப நன்றிங்க… பேரனை என் கண்ணில் காண்பிச்சுட்டீங்க… போதும்கிற அளவு, அவன் உருவத்தை மனதில் நிரப்பிக்கிட்டேன்… இதுவே முதலும், கடைசியுமாக இருக்கட்டும்… இனி, அவனை இங்கே கூட்டிட்டு வரவேண்டாம்,” கையெடுத்து கும்பிட்டாள், ஜெயம்.
”புரியுதும்மா… உங்களால் தேவையில்லாமல், மகன் குடும்பத்தில் பிரச்னை வரவேண்டாம்ன்னு நினைக்கறீங்க… பயப்படாதீங்க… இனி, அழைச்சுட்டு வரமாட்டேன்.”
பேரனை கண்ணீருடன் பார்த்தவள், ”ராஜா… தங்கம்… இந்த பாட்டி சொன்னா கேட்பியா?”
”சொல்லுங்க பாட்டி.”
”நீ பெரியவனாகும்போது, இந்த பாட்டி இருக்க மாட்டேன்… ஆனா, நீயாவது பெத்தவங்களை நினைச்சு பார்க்கணும்… அம்மாவும், அப்பாவும் உன் மேல் எவ்வளவு அன்பும், பிரியமுமாக இருக்காங்க… உனக்காகவே வாழறாங்க… அவங்களை நீ நல்லபடியா பார்த்துகிட்டாலே இந்த பாட்டிக்கு சந்தோஷம்பா…
”இந்த அன்பு மனசின் ஈரம் என்னைக்கும் காயக்கூடாது… இதை மட்டும் நீ மறக்காமல் இருந்தால் போதும்… இந்த பாட்டியின் ஆசி, என்னைக்கும் உனக்கு இருக்கு… போயிட்டு வா ராஜா!”
கண் கலங்கியபடி போகும் பேரனை பார்த்து உருகினாள்..