ARTICLE AD BOX
மேற்கு வங்க அரசு மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாக முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஆர்ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9, 2024 அன்று பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடைபெற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், பலியான பெண்ணிற்கு இன்று நடைபெற்ற அரசு நிகழ்வில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் முதல்வர் மமதா பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் முதுநிலை பயிற்சியாளர்களுக்கு உதவித் தொகை ரூ. 10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
இதையும் படிக்க | 4 ஆண்டுகளாக ஊதியமில்லை! செலவுக்காக இரவுச்சாலையோர உணவகத்தில் பணியாற்றும் ஆசிரியர்!
மேலும், மூத்த மருத்துவர்களின் சம்பளம் ரூ. 15,000 உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். இதன்படி, டிப்ளமோ முடித்த மூத்த மருத்துவர்கள் தற்போது ரூ. 80,000-ம் முதுநிலை மருத்துவர்கள் ரூ. 85,000-ம் ஊதியமாகப் பெறவுள்ளனர்.
கூடுதலாக, டாக்டரேட் முடித்த மூத்த மருத்துவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
நிகழ்வில் அவர் பேசியதாவது:
ஆர்ஜி கார் வழக்கில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, நான் எனது சகோதரர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறேன். நீங்கள் நமது சகோதரிகளைப் பாதுகாக்கவேண்டும்.
சுகாதார அமைச்சகத்தின் வளர்ச்சி மிகவும் பெரியது என்பதால் நான் அதை நிர்வகித்து வந்தேன். இன்று, சமூக ஊடகங்கள் மூலம் ஏராளமான போலி மருந்துகள், போலி மருத்துவ பிரசாரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க பல வசதிகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும், இரவு தங்குமிடங்களை வழங்குவதற்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
இதையும் படிக்க | ஐரோப்பிய மக்கள்தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்!
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் குறைந்தபட்சம் 8 மணிநேரம் பணியாற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் இப்போது நாட்டிலேயே சிறந்த பொது உள்கட்டமைப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை ஏற்கனவே 40,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மருத்துவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செவிலியர்களின் எண்ணிக்கை 25,000 அதிகரித்துள்ளது.
மருத்துவமனை பாதுகாப்பிற்காக முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்க வேண்டும். காவல்துறையினரும் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். கண்காணிப்பு வாகனங்களின் பயன்பாட்டை காவல்துறை விரிவுபடுத்த வேண்டும்.
சைபர் குற்றங்கள் தற்போது அடிக்கடி நடக்கின்றன. மேலும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க, காவல்துறையினருக்கு அதுகுறித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தெருக்களின் ஒவ்வொரு மூலையிலும் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட வேண்டும். தேவைப்பட்டால், கண்காணிப்பு கோபுரங்களைக் கட்ட எம்.பி - எம்.எல்.ஏ நிதியைப் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.