ARTICLE AD BOX
திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி 2021ஆம் ஆண்டு அமைந்தது. இதற்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இதனை நம்பிய அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகள் திமுக அரசு நிறைவேற்றும் என நம்பினர். அதன் படி, 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்புக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பென்சன் திட்டம், அகவிலைப்படி உயர்வு என காத்திருந்தனர். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் வருகிற 25 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டமும், அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டமும் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் கோபத்தை பாடல்களாக, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அதில், இன்னைக்கு சொல்வாங்க, நாளைக்கு சொல்வாங்க, ஏக்கத்தோடு காத்திருக்கிறோம் வருடக் கணக்கில...
பென்ஷன் திட்டம் எப்போ வரும் தமிழகத்தில... வாழ்க்கை யின் ஆணிவேரை அசைத்து பிடுங்கி விட்டு,
சொன்ன சொல்லை மறந்து விட்டு, நிதிச்சுமை காட்டுறீங்க...
புதிதாய் ஒன்றும் கேட்கவில்லை; இருந்ததைத்தான் கேட்கிறோம் என அந்த பாடலில் தங்களது வேதனைகளை தெரிவித்து இருந்தனர்.

இந்த பாடல் அரசு ஊழியர்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.