ARTICLE AD BOX
அதிபர் டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவில் 388 சட்டவிரோத இந்திய குடியேறிகளை இந்தியா அடையாளம் கண்டுள்ளது எனவும் அவர்கள் அனைவரும் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, விமான மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தவர்கள் உள்பட அனைவரும் பனாமா போன்ற மூன்றாம் உலக நாடுகள் வழியாக இ்ந்தியா வந்துள்ளனர். சர்வதேச குடியேற்ற அமைப்பின் உதவியுடன் இந்த நாடுகடத்தும் நடவடிக்கை நடந்துள்ளது.
அமெக்காவின் குடியுரிமை சரிபார்ப்பு தொடர்ச்சியான செயல்முறையாக இருக்கும் என்றும் இன்னும் அதிகமானவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த காலத்தைப் போல குடியுரிமை உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே நாடுகடத்தப்பட மாட்டார்கள்.
இப்போது குடியுரிமை சரிபார்ப்புக்குப் பிறகுதான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படுகிறார்கள். இதனால், இந்தியா அமெரிக்காவில் மொத்தம் எத்தனை இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள எந்த வழியும் இல்லை.
200,000 முதல் 700,000 வரை மிகப் பெரிய எண்ணிக்கையிலான இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடியேறிகளின் எண்ணிக்கை குறித்த தரவு எதுவும் இல்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது.
மாநிலங்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்துள்ளார். "இந்தக் குடியேறிகள் சட்டப்பூர்வமாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர், ஆனால் அவர்களின் அமெரிக்க விசா காலாவதியான பிறகும் அங்கே அதிக காலம் தங்கியுள்ளனர். அல்லது சட்டவிரோதமாக அல்லது தேவையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.
பல்வேறு இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவால் நாடுகடத்தப்படுவதற்காக அடையாளம் காணப்பட்ட நபர்களின் பட்டியலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன, மேலும் இந்திய குடிமக்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மட்டுமே நாடுகடத்தலுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். நாடாளுமன்றத்தில் இதுபற்றிப் பேசிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "சட்டவிரோதமாக வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் நாட்டினரை ஏற்றுக்கொள்வது அனைத்து நாடுகளின் கடமையாகும், ஆனால் அது அவர்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவரா என்பதைத் தெளிவுப்படுத்திக்கொள்வது முக்கியமானது" என்று கூறியிருக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களை இந்தியா ஏற்றுக்கொண்டு வருகிறது. 2019 இல் அதிகபட்சமான 2,042 பேர் நாடுகடத்தப்பட்டு இந்தியா வந்தனர். கடந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 1,368 ஆகக் குறைந்தது.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், சட்டவிரோத குடியேற்றத்தைத் தொழிலாகச் செய்துவருவதைத் தடுக்கவேண்டியதுதான் உண்மையான பிரச்சினையாக உள்ளது என்றும் இதற்கு உதவும் ஏஜெண்டுகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்