ARTICLE AD BOX
சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகளில் பெரும்பாலானோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் 4,500 ஏஜென்டுகள்வரையில் பிடிபட்டனர். அவர்களில் சுமார் 2,000 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் கனடாவிலுள்ள கல்லூரியுடனான தொடர்பின் மூலம் இந்தியர்களை கனடா வழியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய உதவி புரிகின்றனர்.
மாணவர் விசாக்கள் மூலம் கனடாவுக்கு அனுப்பி, அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய வைக்கின்றனர். கனடா கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கான கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 60 லட்சம்வரையில் வசூலிக்கின்றனர்.
இதையும் படிக்க: 10 ஆண்டுகளில் 66% பொருளாதார வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்
நவம்பர் 2021 முதல் ஜூலை 2024 வரையில், இவ்வாறான சட்டவிரோத நாடுகடத்தல் தொழிலில் 12,000-க்கும் அதிகமான நிதி பரிவர்த்தனைகளை ஏஜென்டுகள் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் அமெரிக்கா - கனடா எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற நால்வர், பனியில் உறைந்து பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது ஏஜென்டுகள் குறித்து தகவல் பெறப்பட்டது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்று அறிக்கை கூறுகிறது. 2023 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 67,391 இந்தியர்களில், 41,330 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.