ARTICLE AD BOX
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் ஏறதாழ 200 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே பல காலங்களாக போர் நடைபெற்று வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போரை எதிர்த்து பல நாடுகளிலும் போராட்டங்கள் நிகழ்ந்தன. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கையெழுத்தாகியது. இருப்பினும் அவ்வப்போது இஸ்ரேல் சிறு சிறு தாக்குதலை நடத்தி வந்தது.
ஆனால், தற்போது சில மாதங்களுக்கு பிறகு பெரிய தாக்குதலை இஸ்ரேல் காசா மீது நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் இன்று அதிகாலை நடத்தப்பட்டது. காசாவின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர். காசா நகரம், டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ் மற்றும் ரஃபா உள்ளிட்ட பல இடங்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
காசாவில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், இந்த தாக்குதலுக்கு முன்னர் இஸ்ரேல், அமெரிக்காவிற்கு போன் செய்தது என்றும், எங்களிடம் ஆலோசனை பெற்றப் பின்னரே முழு வீச்சோடு போரை நடத்தியது என்றும் கூறினார்.
ஹமாஸ் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி என யாராக இருந்தாலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கான காரணம், ஹமாஸ் இஸ்ரேலின் பணயக் கைதிகளை இன்னும் முழுவதுமாக விடுவிக்காததுதான் என்று கூறப்படுகிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்து பேசியுள்ளது. இஸ்ரேல் ஒருதலைபட்சமாகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாலேயே பணய கைதிகளை விடுவிக்கவில்லை என்று கூறியது.
இந்த தாக்குதலில் சரியாக எத்தனை பேர் இறந்துள்ளனர் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 100 முதல் 200 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.