ARTICLE AD BOX
அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. இதன்மூலம் பணிநீக்கம், நிதி ரத்து உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் எலான் மஸ்க்கிற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்தும் மக்கள் போராடி வருகின்றனர். மறுபுறம் இவ்விவகாரம் தொடர்பாக அங்குள்ள நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எலோன் மஸ்க்கும் கலந்து கொண்டார். அப்போது DOGE எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து எலான் மஸ்க்கை விளக்குமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டார். அப்போது அவர், “DOGE அமைப்புகளில் பல மிகவும் பழமையானவையாக இருக்கின்றன. அவற்றை தொடர்புகொள்ள முடிவதில்லை. மேலும், அமைப்புகளில் நிறைய தவறுகள் உள்ளன. மென்பொருள் வேலை செய்யாது. எனவே, நாங்கள் உண்மையில் தொழில்நுட்ப ஆதரவு பெற முயல்கிறோம். இதில்தான் முரண்பாடாக இருக்கிறது. ஆனால் அது உண்மைதான். DOGE-இன் ஒட்டுமொத்த இலக்கு, மிகப்பெரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாகும். ஒரு நாடாக, 2 டிரில்லியன் டாலர் பற்றாக்குறையை நாம் தாங்கிக்கொள்ள முடியாது. நாம் இதைச் செய்யாவிட்டால், அமெரிக்கா திவாலாகிவிடும். இதனால்தான் விமர்சனத்தைப் பெறுகிறோம். தவிர, தாம் செய்து கொண்டிருக்கும் பணிக்காக நிறைய கொலை மிரட்டல்கள் வேறு வருகின்றன. ஆனால் நாம் ஒரு தவறு செய்யும்போது, அதை மிக விரைவாக சரிசெய்வோம்” எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ட்ரம்ப், ”எலான் மஸ்க் மீது யாராவது அதிருப்தி அடைந்திருக்கிறார்களா? அப்படி இருந்தால் நாங்கள் அவர்களை இங்கிருந்து தூக்கி எறிவோம். எலோன் மஸ்க்மீது பலர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். சிலர் கொஞ்சம் உடன்படவில்லை” எனத் தெரிவித்தார்.
நாட்டின் 2.3 மில்லியன் மத்திய அரசு ஊழியர்களில் சுமார் 1,00,000 பேர் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் DOGE இன் தொழில்நுட்ப ஊழியர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பேர், நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் வேலை செய்ய மாட்டோம் என்று கூறி ராஜினாமா செய்திருந்தனர்.