ARTICLE AD BOX
அமெரிக்கா இறக்குமதிகளுக்கு பூஜ்ஜிய வரிவிதிப்பா?. இந்தியாவில் நடக்கப்போகும் மாற்றங்கள்.!!
கடந்த 2 நாட்களுக்கு முன் இந்தியா அமெரிக்காவிடம் மிக அதிகமான வரியை வசூலிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். அதாவது, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் எந்தவித பொருட்களையும் விற்க முடியாத அளவிற்கான வரி வசூலிக்கப்படுவதாகவும், ஆனால், அவர்களின் அதிக வரியை யாரோ ஒருவர் அம்பலப்படுத்தியதால், ஒரு வழியாக வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டதாகவும் விமர்சித்திருந்தார். இருப்பினும், இதற்கு மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், முந்தைய கால ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளால் வரியை குறைக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தியிருந்தது.
ஆனாலும், இந்தியாவுக்கு ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தநிலையில், இந்த பரஸ்பர வரிகளை விதிக்கும் டிரம்பின் நடவடிக்கை, சீனாவிலிருந்து மின்னணு உற்பத்தியாளர்களை இந்தியாவிற்கு ஈர்ப்பதற்கான ஒரு மூலோபாய வாய்ப்பாக இருக்கக்கூடும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே வரியில்லாத(பூஜ்ஜிய வரி) வர்த்தகமே சிறந்தது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, அமெரிக்க மின்னணு பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைத்தால் மட்டுமே, அமெரிக்காவும் பூஜ்ய வரிக்கு ஒத்துப்போகும் என்றும் கூறுகின்றனர்.

தற்போது, இந்தியாவில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணுப் பொருட்களுக்கு 16.5% அடிப்படை சுங்க வரி (BCD) விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா, இந்திய ஏற்றுமதிகளுக்கு வெறும் 0.4% வரியை மட்டுமே விதிக்கிறது. ஆனால், அமெரிக்கா சார்ந்த இறக்குமதிகளுக்கு சுங்க வரிகளை குறைத்தால், ஆப்பிள் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கான ஈர்க்கக்கூடிய இடமாக இந்தியா மாறக்கூடும். ஆனால், தற்போது அமெரிக்கா- சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் கட்டணப் போர் காரணமாக, சீனாவிலிருந்து விலகிச் செல்லும் உற்பத்தியாளர்களை ஈர்க்க, இந்த சுங்க வரி குறைப்பை இந்தியா ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். மேலும், இந்தியா அமெரிக்காவிலிருந்து மிகவும் குறைந்த அளவிலான மின்சாதனங்களை மட்டுமே இறக்குமதி செய்கின்றது, எனவே சுங்க வரிகள் குறைக்கப்பட்டால் உள்ளூர் நிறுவனங்களின் மீது தாக்கம் ஏற்படுவதோ அல்லது அமெரிக்க தயாரிப்புகளால் சந்தையை நிரப்பவோ வாய்ப்பில்லை.
மேலும், பரஸ்பர பூஜ்ஜிய வரி வர்த்தக ஒப்பந்தத்தை, ஃபாக்ஸ்கான், ஆப்பிள் மற்றும் டிக்சன் போன்ற முக்கிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய செல்லுலார் மற்றும் மின்னணுவியல் சங்கம் (ICEA), ஆதரிக்கிறது. இருப்பினும் இந்தியா ஏற்கனவே, ஜப்பான், தென் கொரியா மற்றும் வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற ஆசியான் நாடுகளுடன் FTA (Free Trade Agreement) இலவச வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் மின்சாதனங்கள், பொருட்களை வழங்கி வருகிறது என்று ICEA கூறியது .
இதுதொடர்பாக, ICEA தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ கூறுகையில், இரு நாடுகளுக்கிடையிலான நன்கு கட்டமைக்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும், இதெல்லாம் சரியாக நடந்தால், 2030 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவிற்கான இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியை 10 பில்லியன் டாலரிலிருந்து 80 பில்லியன் டாலராக உயர்த்தக்கூடும், இது 800% அதிகரிக்கும் என்று கூறினார்.
இந்தியாவின் மின்னணுத் துறைக்கு, குறிப்பாக ஐபோன்களுக்கு, அமெரிக்கா ஒரு முக்கிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது, அதாவது, iPhones க்கான சந்தை ஏற்றுமதிகளில் 50% பங்கை கொண்டுள்ளது. இந்தியாவின் மொபைல் போன்களின் மொத்த ஏற்றுமதிகள் 2024 இல் $20.4 பில்லியனாக அதிகரித்தது, ஆனால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் மின்சாதன இறக்குமதிகள் $1 பில்லியனாக உள்ளன, இது உள்ளூர் நிறுவனங்களுக்கு சிறிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Counterpoint Research படி, மின்சாதனங்கள் என்பது முக்கியமான துறையாக இருக்கின்றது, ஆனால் மொட்டார்சைக்கிள்கள், மருந்துகள் மற்றும் வேளாண்மை போன்ற பிற தொழில்களுக்கு நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் முன்னுரிமை பெறும். பிற துறைகளின் வரிகள் தொடர்பாக தற்போது பரிசீலனையில் இருப்பதால், "மின்சாதனங்களின் மீதான சுங்க வரி தொடர்பான விவாதங்கள் பிறகு நடக்கும்" என்று Counterpoint Research இயக்குனர் தரூன் பாதக் கூறினார்.
மேலும், இந்தியா ஒரு வலுவான உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது என்றும், இறக்குமதி வரிகளை அமெரிக்க விகிதங்களுடன் இணைப்பது அபாயங்களை விட அதிக நன்மைகளைத் தரும் என்றும் Counterpoint Research-ன் மூத்த ஆய்வாளர் பிரச்சிர் சிங் கூறினார். "நாட்டின் இறக்குமதி வரிகளைக் குறைத்து, மின்னணு சாதனங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவது ஒரு நல்ல உத்தியாக இருக்கும், ஏனெனில் இது நமக்கு தீங்கு விளைவிப்பதை விட அதிக நன்மையைச் செய்யும்" என்றும் பிரச்சிர் சிங் கூறினார்.
இந்தியா தற்போதைய கட்டணங்களை அப்படியே வைத்திருக்க முடிவு செய்தால், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் குறைந்த இறக்குமதி வரிகளைக் கொண்ட பிற நாடுகளில் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த முயற்சிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், "எங்கள் மின்னணு ஏற்றுமதிகள் அமெரிக்காவைச் சார்ந்தே உள்ளன. ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து முன்கூட்டியே ஏற்றுமதி செய்வதால்தான் நாங்கள் சாதிக்க முடிந்தது," என்று Techarc-ன் தலைமை ஆய்வாளர் பைசல் கவூசா கூறினார். மேலும், எதிர்காலத்தில் Qualcomm போன்ற நிறுவனங்கள் சீனாவிற்குப் பதிலாக இந்தியாவில் chips-களை அசெம்பிள் செய்யத் தொடங்குவது சாத்தியமாகும் அசெம்பிள் செய்யத் தொடங்குவது சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.