ARTICLE AD BOX
கோவையில் புதன்கிழமை நடைபெறும் பா.ஜ.க புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு கோவை மாநகர மாவட்ட பா.ஜ.க சார்பில் மேல தாளங்களுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கும் மத்திய உள்துறை அமைச்சரை தொழில்துறையினர் பலர் நேரில் சந்திக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து நாளை காலை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க.,வின் புதிய மாநகர அலுவலகத்தினை அமித்ஷா திறந்து வைக்கிறார். அங்கு பா.ஜ.க நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து நாளை 26 ஆம் தேதி இரவு பூண்டி வெள்ளிங்கிரியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் மறுநாள் காலை 27ஆம் தேதி தனி ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் அமித் ஷா, தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி கோவை மாநகர பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை விமான நிலையம், அவிநாசி சாலை, பீளமேடு, ஈஷா யோகா மையம் ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிகளுக்காக 5000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்காக அவிநாசி சாலை, பீளமேடு எல்லை தோட்டம் சாலை, தண்ணீர் பந்தல் சாலை, தொண்டாமுத்தூர் மற்றும் பூண்டி பிரதான சாலைகளில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் நாளை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.