ARTICLE AD BOX
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அமைச்சர் பதவியில் இருப்பதால் சாட்சிகள் பாதிக்கப்படலாம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் ஒரு வருடமாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி வேறு வழியில்லாமல் தனது பதவியை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நீண்ட சட்டப்போராட்டத்தை அடுத்து 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஜாமீனில் இருந்து வந்த வேகத்திலேயே செப்டம்பர் 28ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி பண மோசடியில் பாதிக்கப்பட்ட புகார்தாரர் வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராகத் தொடர்ந்தால் என்னவாகும்? செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியில் நீடிக்க விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறிவிட்டதாகவும், எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. அதில், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இது அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சில முக்கியமான சாட்சிகள் அவரது துறையில் இதற்கு முன்பாக பணியாற்றியவர்கள். எனவே அவர்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியம் அளிக்க அச்சப்படக்கூடும். செந்தில் பாலாஜியும் வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் விசாரணைகளுக்கு முறையாக ஆஜராகுவதில்லை. எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளனர். இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்க வர உள்ளது. ஏற்கனவே அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? என்ன உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்த புதிய மனு அவருக்கு சிக்கலை எற்படுத்தலாம் என கூறப்படுகிறது.