ARTICLE AD BOX
தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. கே.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
கேரள மாநிலம், ஆலத்தூா் மக்களவைத் தொகுதி எம்.பி. கே. ராதாகிருஷ்ணனுக்கு கருவண்ணூா் கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் தொடா்புள்ளதாகக் குற்றஞ்சாட்டி பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) அவா் சனிக்கிழமை (மாா்ச் 15) நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியதாக அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவா் கூறியதாவது: அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸில் கருவன்னூா் கூட்டுறவு வங்கி வழக்கு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதில் என்னுடைய சொத்துகள், வங்கிக் கணக்கு மற்றும் நில ஆவணங்கள் பற்றிய தகவல்களைச் சமா்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெற்று வருவதால் அமலாக்கத் துறை குறிப்பிட்ட தேதியில் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது என கடிதம் அனுப்பியுள்ளேன்.
கூட்டத்தொடா் நிறைவடைந்தவுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பேன். எனது சொத்துகளை குறிவைத்து விசாரணை நடத்தப்படுகிறது. அவா்கள் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய நான் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கருதப்படும் கருவண்ணூா் கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி வரை முறைகேடு நடைபெற்ற குற்றச்சாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு 16 முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) கேரள காவல் துறையின் குற்றப் பிரிவு அதிகாரிகள் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பா் மாதங்களில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை 4 பேரை கைது செய்தது. மேலும் ரூ.117 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது.