ARTICLE AD BOX
ஆங்கிலத்தில் 'அமராந்த்' என்று அழைக்கப்படும் அரைக்கீரை, முளைக்கீரை மற்றும் செங்கீரை ஆகிய கீரை வகைகளில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இவற்றை அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொள்வதால் கிடைக்கும் 9 வித நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. பொட்டாசியம்: இக்கீரைகளிலிருந்து பெறப்படும் பொட்டாசியம் சத்தானது இதய ஆரோக்கியம் காக்கவும், தசைகளின் சீரான இயக்கத்திற்கும், உடலின் நீர்ச் சத்தை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகிறது.
2. கால்சியம்: அமராந்த் வகை கீரை இலைகளில் கால்சியம் சத்து மிக அதிகம் உள்ளது. இது வலிமையான பற்கள் மற்றும் எலும்புகள் பெற உதவும். மேலும் நரம்புகள் மற்றும் தசைகளின் சிறப்பான இயக்கங்களுக்கும் உதவி புரியும்.
3. மக்னீசியம்: மிக அதிக அளவில் மக்னீசியம் சத்து அமராந்த் வகை கீரை இலைகளில் நிறைந்துள்ளது. மக்னீசியம், உடலில் இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்க உதவும். தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகள் சிறப்பாகவும் துணை புரியும்.
4. இரும்புச் சத்து: இரத்தத்தில் காணப்படும் மிக முக்கியமானதொரு பொருள் ஹீமோகுளோபின். இது நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று உடலின் அனைத்துத் திசுக்களுக்கும் வழங்கி வரும் பணியைச் செய்து வருகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அமராந்த் கீரை இலைகளில் அடங்கியிருக்கும் இரும்புச் சத்து பெரிதளவில் உதவி புரியும். இதனால் உடலில் இரும்புச் சத்து குறைபாடு உண்டாகாது. அனீமியா நோய் வரும் அபாயமும் தடுக்கப்படும்.
5. காப்பர் மற்றும் மாங்கனீஸ்: இவை உடலில் என்சைம்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களைப் பாதுகாக்கவும், திசுக்கள் இணைந்திருக்கவும் உதவக்கூடிய கனிமச் சத்துக்கள் ஆகும். இவ்விரண்டு சத்துக்களும் அரைக்கீரை, முளைக்கீரை மற்றும் செங்கீரை இலைகளில் மிக அதிகளவில் நிறைந்துள்ளன.
6. சிங்க்: அரைக்கீரை முளைக்கீரை மற்றும் செங்கீரை இலைகளில் சிங்க் என்ற கனிமச் சத்தும் உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும், உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகவும் உதவி புரியும். மேலும் செல்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான சருமம் பெறவும் உதவும்.
7. ப்ரோட்டீன்: தாவர அடிப்படையில் (plant-based) கிடைக்கும் ப்ரோட்டீன் சத்துக்கள் அமராந்த் இலைகளில் மிக அதிகம் நிறைந்துள்ளன. இவை உடலின் மொத்த இயக்கங்களுக்கும், தசைகளின் வளர்ச்சிக்கும், சிதைவுற்ற திசுக்களின் சீரமைப்பிற்கும் சிறந்த முறையில் உதவி புரியக் கூடியவை.
8. நார்ச்சத்து: அமராந்த் கீரைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இரைப்பை குடல் இயக்கங்கள் சிறப்பாக நடைபெறவும் மலச்சிக்கல் நீங்கவும் உதவுகின்றன.
9. வைட்டமின் C: அமராந்த் இலைகளில் வைட்டமின் C மற்றும் ஃபிளவனாய்ட்களும் காணப்படுகின்றன. இவை இரண்டும் இணைந்து உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்கவும், ஃபிரீ ரேடிக்கல்களினால் செல்கள் சிதைவடையாமல் பாதுகாக்கவும் உதவி புரிகின்றன.
மேலே குறிப்பிட்ட கீரை வகைகளில் ஒன்றை அடிக்கடி நம் உணவோடு சேர்த்து உண்டு ஆரோக்கியம் குறையாமல் உடலைப் பாதுகாப்போம்.