ARTICLE AD BOX
"பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே" என்பான் பாரதி.
ஆண்டவரே! அறியாமல் செய்கின்றனர். மன்னித்தருளும் என்ற பண்பின் விரிவாக்கமே விவிலியம். கோப்பையில் இருப்பது நஞ்சு என்று தெரிந்து தானே மகிழ்வாகக் குடித்துமாண்டு போனார் கிரேக்கத்தின் சித்தர் சாக்ரட்டீஸ்.
மண்வாசனையை காத்திடப் போராடிய தமிழ் மண்ணின் சிங்கங்களான கட்டபொம்மனும், சின்னமருதும், பெரிய மருதும் மரணத்தையே முத்தமிட்டு வரவேற்ற வரலாற்றினை மறக்க இயலுமா?
இதுபோன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை நமக்குக் காட்டிய தவசீலர்கள் ஏராளம். இவர்கள் வாழ்ந்து வரலாறாகிப் போனவர்கள்.
எதிர்பார்க்கின்ற போதுதான் ஏமாற்றத்தின் ஜனனம், பிறக்கிறது எனவே எதையுமே எதிர்பார்க்காது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.
பெற்றெடுத்த தாய், தந்தையருக்கும் தன்கை பிடித்த மனைவிக்கும் தன் மழலைகளுக்கும் செய்கின்ற உதவிகளுக்கு எதை எதிர்பார்த்து நிற்கிறோம்? இன்றைக்கும் பலர் நம்மில், பிறருக்குச் செய்கின்ற உதவிகளுக்கு நன்றியை எதிர்நோக்கி ஏங்கித் தவிக்கின்றார்கள். மாறாக எதிர்முனையிலே இருந்து எவ்வித 'நன்றி'யும் வராது போகுமானால் துவண்டு விடுகின்றார்கள். இதுவே இவர்களது மனக்கவலைக்கு வித்தாக விழுகிறது.
எனவே தாராளமாக எல்லோரிடத்திலேயும் எதையும் எதிர்பார்க்காது அன்பு செலுத்துங்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன்றைக்கு புற்றீசல் போல நகரம் முதல் கிராமம் வரை 'முதியோர் இல்லங்கள்' அதிகரிப்பதின் அடையாளமே. இதற்கு என்ன காரணம்? 'வாய்மொழி அன்பு, தனது மகன் மகளிடத்திலே பஞ்சமாக போனதன் எதிரொளியே என்பதை வேதனையோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் ஒரு நாள் கிரேக்கத்தின் தலைநகர் மக்கள் நெரிசலான நான்கு வீதிகள் கூடும் மையப்பகுதி. பட்டப்பகல் பன்னிரண்டு மணி, வயோதிக் கிழவன் ஒருவன் கையிலே தீப்பந்தம் பிடித்து அங்கும் இங்கும் எதையோ தேடுகின்றான். சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் கையிலே தீப்பந்தத்தையும் பிடித்துக்கொண்டு தேடுகின்றவனைப் பார்த்த மக்கள்; கேலியும் கிண்டலும் செய்து கைகொட்டி சிரிக்கின்றனர். கிழவன் அசரவில்லை.
அப்போது ஒருவன் "பெரியவரே! எதைத் தொலைத்தீர்? என்ன தேடுகின்றீர்" என்றான். பெரியவர் நின்று மனிதனைத் தேடுகின்றேன். என்றார் கிரேக்கத்து தவஞானி "டயோஜினிஸ்" .
நினைத்துப் பாருங்கள், இன்றைக்கும் அதே நிலைதான் . இல்லையென்றால் துப்பாக்கிச் சத்தம் தூங்காது ஒலிக்கின்றதே ஏன்? உலகம் தழுவிய நிலை இதுவாகத்தானே இருக்கிறது. காரணம் என்ன? மனித நேயமும் இறையாண்மையும் கடுகைவிட சிறுத்துக்கொண்டே போகின்றது என்பதைத்தான் சொல்கின்றது.
இதற்கு விடிவு என்ன? இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற இளைய தலைமுறையினர் தங்களது மழலைகளுக்கு தவறாது மறக்காது "அன்பே கடவுள் "அன்பாகப் பேசு " "அன்பாக நட" என்பவனவற்றை அகரமாகச் சொல்லிக்கொடுங்கள். நாளைய தலைமுறையினர்களுக்கு காப்பகங்கள் தேவை இல்லாது இருக்கட்டும்.
வாலிப வனப்போடு வாழ்ந்து வரும் நீங்கள், உங்கள் சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகளுக்கு இன்றிலிருந்து அன்பைப் பொழிந்து அன்போடு வாழ வழியையும் கற்றுக்கொடுங்கள்: இன்றைக்கே நீங்கள் செய்தால் நாளை உங்களது வயோதிகத்தின் நித்திரைக்கு அவர்களது நெஞ்சும் படியும் தலையணைகளாக மெத்தென்று சுகமாக இருக்கும். இது சத்தியம்.