அன்பான உறவுகள் சிறக்க வேண்டுமா?

3 hours ago
ARTICLE AD BOX

ல்லோருக்குமே உறவுகள் இனிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. சில சமயம் அது பேராசையாக தோன்றும்படி செய்து விடும். பலருக்கும் தேவையான உறவுகள் நல்ல புரிதலிலும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதிலும் மற்றும் உறவினில் மகிழ்ச்சியான மனநிலையை பெறுவதிலும் மிகவும் முக்கியம். உறவு என்பது கணவன் மனைவி புரிதல் மட்டுமல்ல. உறவுகளுக்கு இடையேயும் சிறந்த புரிதல் அவசியம். அப்பொழுதுதான் எந்த உறவுமே கசந்து விடாமல் இருக்கும்.

உறவுகளுக்குள் மரியாதையும் நம்பிக்கையும் மிகவும் அவசியம். நம் அப்பாதானே என்று ஜோவியலாக பேசுதாக நினைத்துக் கொண்டு மரியாதை குறைவாக மனதை புண்படுத்தும்படி பேசக்கூடாது. அதேபோல் நம் பிள்ளைகள்தானே இவர்கள் ஒன்றும் நினைத்துக் கொள்ளமாட்டார்கள் என்று அசட்டையாக, அவர்களை மரியாதைக் குறைவாக மட்டம் தட்டும்படி நடத்தவும் கூடாது.

திறந்த மனதுடன் நம் உறவுகளுடன்  வெளிப்படையாக பேசும்பொழுது நல்ல உறவை பராமரிக்க முடியும். ஒரு முடிவு எடுக்கும் சமயம் நம்மைச் சுற்றி உள்ள முக்கியமான உறவுகளையும் குறிப்பாக கணவன் என்றால் மனைவி, பிள்ளைகளையும் கலந்தாலோசித்து அவர்களின் கருத்தையும் கேட்டு செய்வது சுமுகமான உறவை வளர்ப்பதற்கு உதவும்.

உறவுகள் இனிக்க வேண்டுமானால் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் உறவுகளை வலுவடையச் செய்ய முடியும். நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் அதே சமயம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நம் இருப்பு அவசியமல்லவா? வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது வலுவான உறவுக்கு மிகவும் அவசியம்.

உறவுகள் வளர முக்கியமான தேவை பொறுமை. சில நேரங்களில் உறவுகளுக்கிடையே சுமுகமான தொடர்பு இல்லாமல் போகலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஏன் பிரச்சனைகள் எழுகின்றன என்பதை ஆராய்ந்து சுமுகமான தீர்வைத் தேடலாம். 

உறவுகளில், நட்புகளில் சந்தேகங்கள் ஏற்பட்டால் விரிசலை ஏற்படுத்தும். எனவே சந்தேகம் என்று வந்துவிட்டால் அதனை முதலில் சரி செய்வது அவசியம். அதாவது வெளிப்படையாக பேசி அவர்களின் சந்தேகத்தை போக்குவதன் மூலமும், தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்க தயங்காமலும், பிறர் தவறு செய்திருப்பின் மன்னிக்கவும் கற்றுக் கொண்டால் உறவுகள் இனிக்கும்.

இதையும் படியுங்கள்:
அவமானங்களை கடக்கும் போதுதான் வெற்றியின் ருசி தெரியும்!
Do you want loving relationships to flourish?

உறவுகள் வலுப்பட முக்கியமான தேவை எப்பொழுதும் நேர்மறையாக சிந்திப்பதும், மற்றவர்களை நேர்மறையாக பார்க்கவும் தெரிந்துகொள்ள வேண்டும். சிலர் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு சுற்றி உள்ளவர்கள் செய்யும் தவறுகளை பெரிதாக்கி தானும் சங்கடப்பட்டு மற்றவர்களையும் கஷ்டத்தில் ஆழ்த்துவார்கள். இதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.

உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அதில் எத்தனையோ விதங்கள் இருக்கின்றன. வாழ்க்கைத்துணை, சொந்த பந்தம், பெற்றோர், குழந்தைகள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள் என்று அனைவருமே உறவு வட்டத்திற்குள் வருபவர்கள் தான். உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரத்தை சார்ந்து என நமக்கு எவ்வளவு தேவைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உறவுகள் உருவாவது இயற்கைதான்.

நம் தேவைகளை நிறைவு செய்வதற்காக உறவுகள் ஏற்பட்டு இருக்கின்றது என்றாலும் அந்த உறவுகளின் தேவைகளை ஈடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் நமக்கு உள்ளது. எனவே மகிழ்ச்சியான மனநிலையுடன் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு உறவை வளர்க்க உறவு என்பது கசந்து விடாமல் இனிக்கும் கரும்பாகவே இருக்கும்.

உறவுகளை சரியாக நிர்வகிக்க தெரிந்துகொண்டால் வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சமூகத்தில் ஒவ்வொருவருமே ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழ வேண்டி இருக்கிறது. நாம் மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடனும் இருக்கும்பொழுது நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் நல்ல உறவுகளை நம்மால் வளர்த்துக் கொள்ள முடியும். உறவுகளை இனிமையாக வைத்துக் கொள்வதும் சிக்கல் மிக்கதாய் உருவாக்கிக் கொள்வதும் நம் கையில்தான் உள்ளது.

உண்மைதானே?

இதையும் படியுங்கள்:
அன்பைப் பொழிந்து, அன்பால் வாழுங்கள்!
Do you want loving relationships to flourish?
Read Entire Article