ARTICLE AD BOX
சென்னை,
எஸ்.கே.செந்தில் ராஜன் இயக்கத்தில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராமர் நடித்துள்ள படம் 'அது வாங்குனா இது இலவசம்'. கடந்த 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பூஜாஸ்ரீ, கலையரசன், சம்பத், மாரிஸ் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்வின் ராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் 'அது வாங்குனா இது இலவசம்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
கதையின் நாயகன் ராமர், நண்பர்களுடன் திருட்டுத்தொழில் செய்து பிழைப்பு நடத்துகிறார். இவர்களின் குற்றச் செயலால் பலர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இன்னொரு பக்கம் இளம் பெண்களை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்கிறது. குற்றவாளிகளை போலீஸ் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஒரு கட்டத்தில் தவறு செய்பவர்களை தண்டிக்க நாயகி பூஜாஸ்ரீ களம் இறங்குகிறார். அவர் பழிவாங்க காரணம் என்ன? என்பது மீதி கதை.
ராமர் வில்லத்தனமும், காமெடியும் கலந்து செய்து பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். பெண் வேடமிட்டு லாரி டிரைவரை ஓரங்கட்டுவது, அதே வேடத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடிப்பது தமாஷ். பூஜாஸ்ரீ, கதாபாத்திரத்தை உள்வாங்கி நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். அமைதியாக வந்து அதிரடியான சம்பவங்களை செய்து பார்வையாளர்களை பதறவும் வைக்கிறார்.

கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் நேர்த்தியான நடிப்பை வழங்கி உள்ளனர். அர்வின் ராஜ் கதைக்கு தேவையான பின்னணி இசையை கொடுத்துள்ளார். விக்னேஷ் மலைச்சாமியின் ஒளிப்பதிவு சிறப்பு.
திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். இளம்பெண்களை கடத்தி பலாத்காரம் செய்யும் கும்பல், காதலர்களின் படுகொலை என்று ஆரம்ப காட்சிகள் மிரள வைக்கின்றன. கிரைம், திரில்லர் கதையை விறுவிறுப்பாகவும், ரசிக்கும்படியும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ்.கே.செந்தில் ராஜன். சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும், அவர்களின் தவறுக்காக நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.