ARTICLE AD BOX
அதீத மன அழுத்தம்.. தற்கொலை முயற்சி இல்லை.. பாடகி கல்பனாவின் மகள் பரபரப்பு பேட்டி!
சென்னை: பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலைக்கு முயன்று அதிகமான தூக்க மாத்திரையை பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்ட, போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், கல்பனாவின் மகள் செய்தியாளர்களை சந்தித்து, இது தற்கொலை முயற்சி இல்லை என கூறியுள்ளார்.
1980 ஆம் ஆண்டு பிறந்த கல்பனாவின் தந்தை டி.எஸ். ராகவேந்திரா பின்னணிப் பாடகரும், நடிகரும் இசையமைப்பாளருமாவார். டி.எஸ். ராகவேந்திரா வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதிக்கு அப்பாவாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து, சிந்து பைரவி, சின்னத்தம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சொல்ல துடிக்கிது மனசு, கற்பூர முல்லை ஆகிய படத்தில் நடித்துள்ளார். இவரது தாய் சுலோச்சனாவும் பிரபலமான பாடகி தான்.

யார் இந்த கல்பனா: பாடகி கல்பனா பாடகியாக மட்டும் இல்லாமல்,தனது ஐந்த வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் இவர் 'புன்னகை மன்னன்', 'பூ பூவா பூத்திருக்கு', 'ஆண்பாவம்' தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் ராஜ்கிரண், மீனா நடித்த என் ராசாவின் மனசுல படத்தில் வரும் போடா போடா புண்ணக்கு போடாதே தப்பு கணக்கு என்ற பாடலை பாடி சினிமாவில் பாடகியாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து, தாஜ்மகால் படத்தில் வரும் திருப்பாச்சி அருவாள பாடலையும், சூர்யா, ஜோதிகா நடித்த கடவுள் தந்த அழகிய வாழ்வு.. காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே, பிரியமான தோழி படத்தில் வரும் பெண்ணே நீயும் பெண்ணா.. ஒரு சின்ன வெண்ணிலா போலே.., மதுரை ஜில்லா மச்சம்தாண்டா.. என பல வெற்றிப்பாடலை இவர் பாடி உள்ளார். தமிழ், தெலுங்கு என ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட திரைப்படத்தில் பாடலை பாடி உள்ள இவர், கிட்டத்தட்ட 3,000 மேடைகளில் பாடியுள்ளார்.
தற்கொலை மயற்சி: இந்நிலையில், ஹைதராபாத்தில் நிஜம்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாடகி கல்பனா வசித்து வருகிறார். பாடகி கல்பனாவின் வீடு, இரண்டு மூன்று நாட்களாக மூடப்பட்டு, கதவு திறக்காமலே இருந்துள்ளது. நேற்று, செவ்வாய் கிழமை குடியிருப்பு வாசிகள் நடத்தும் மீட்டிங்கில் ஒன்று கலந்து கொள்வதற்காக கல்பனாவை அழைக்க பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்ற போது. பலமுறை கதவை தட்டியும் தகவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள், கல்பனாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள், கல்பனாவின் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும். அதில், எந்த பலனும் இல்லாமல் போனதால்,
ஆபத்தான நிலையில் பாடகி: குடியிருப்பு வாசிகள், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைவாக வந்து கதவை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால், கதவை உடைக்க முடியாததால் பின்பக்கமாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது. பாடகி கல்பனா காட்டிலில் மயங்கிய நிலையில், சுயநினைவு இல்லாமல் கிடந்தார். இதையடுத்து, காவல்துறையினர் கல்பனாவை மீட்டு அருகில் உள்ள, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாடகி கல்பனா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. கல்பனாவிற்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு என்றும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும். இதனால் மன உளைச்சலில் இருந்த கல்பனா, தூக்க மாத்திரையை சாப்பிட்டு இந்த முடிவை எடுத்து இருப்பாக கூறப்படுகிறது. மேலும், கல்பனாவின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாக, அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.
தற்கொலை இல்லை: இந்நிலையில், பாடகி கல்பனாவின் மகள் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், நான் கல்பனாவின் மகள், அம்மா இப்போது நன்றாக இருக்கிறார்கள். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை, என்னுடைய தாய் தந்தை இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். அம்மா தற்போது எல்எல்பிஏ படித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் பணிச்சுவை இருந்ததால், அவருக்கு தூக்கம் வராதது. இதனால், ஏற்பட்ட மன அழுத்தம் காரணம் அம்மா, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தினமும் தூக்க மாத்திரைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் எடுத்துக்கொண்ட மாத்திரையில் கொஞ்சம் Over Dose ஆகிவிட்டதால், சுயநினைவை இழந்துவிட்டார். ஆனால், இணையத்தில் வரும் செய்திகளில் தற்கொலை முயற்சி என்றும் செய்திகள் வெளிவருகிறது. அம்மா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை.
தவறான செய்திகயை பரப்பாதீர்கள்: மற்றபடி எங்களது குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, என் அம்மா, நான் மற்றும் என் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள், அது சங்கடத்தில் ஆழ்த்துகிறது. அம்மா இப்போது நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என மருத்துவர் கூறி இருக்கிறார். மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் இது தற்கொலை முயற்சி இல்லை Over Dose ஆகிவிட்டது என பாடகி கல்பனாவின் மகள் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
அந்த எண்ணத்தில் இருந்து மீண்டேன்: பாடகி கல்பான 2017ம் ஆண்டு விகடனுக்கு அளித்த பேட்டியில், கஷ்டமான வாழ்க்கைப் போராட்டத்தில் தற்கொலை முயற்சிக்குப் போயிருக்கேன். இந்த அழகிய வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரிஞ்சுகிட்டதும் என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அந்தச் சமயத்தில் என் பொண்ணும் குடும்பமும்தான் எனக்குப் பக்கபலமா இருந்தாங்க. மறுபடியும் பாடகியாக என் பயணம் வேகமெடுத்துச்சு. அதிலிருந்து மீண்டு வந்தேன் என பேசி இருந்தார். பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி வெளியானதும், அவரின் பழைய பேட்டி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.