ARTICLE AD BOX
நம்முடைய வாழ்க்கையில் வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டத்தை நம்பியே இருப்பதில்லை. எவன் ஒருவன் தன்னுடைய உழைப்பையும், நம்பிக்கையையும் கைவிடாமல் செயலாற்றுகிறானோ? அவனிடம் அதிர்ஷ்டம் தானாக வந்து சேரும். வெறும் அதிர்ஷ்டத்தை வைத்து மட்டுமே வெற்றியடைந்தவர்கள் என்று எவரும் இல்லை. இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஏழை வியாபாரி ஒருவன் தன்னுடைய குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான். ஒருநாள் அவன் வரும் வழியில் பழங்காலத்து நாணயம் ஒன்றைக் கண்டான். அந்த நாணயத்தின் நடுவிலே துளை ஒன்று இருந்தது. அந்த நாணயத்தை அதிர்ஷ்டம் என்று எண்ணினான். அந்த நாணயத்தை அவன் கோட்டில் போட்டுக்கொண்டான். அவனுக்கு மற்ற நாளைவிட அந்த நாள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தது. எல்லாம் நாணயம் கிடைத்த அதிர்ஷ்டம் என்று நினைத்தான்.
வீட்டிற்கு சென்று மனைவியிடம் நடந்ததைக் கூறினான். அடிக்கடி கோட்டில் இருக்கும் நாணயத்தை வெளியில் எடுக்காமல் தொட்டுப் பார்த்துக்கொள்வான். சில வருடங்களில் பெரும் செல்வந்தன் ஆனான்.
ஒருநாள் தன் மனைவியை அழைத்து, ‘எனக்கு அந்த நாணயத்தை பார்க்க வேண்டும்போல இருக்கிறது. என்னுடைய கோட்டை கொண்டு வா!' என்று கூறினான். அதில் துளையில்லாத நாணயம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். அவனுடைய மனைவியிடம், ‘இதில் நான் வைத்திருந்த துளையுடைய நாணயம் எங்கே?’ என்று கேட்டான்.
அதற்கு மனைவி, ‘என்னை மன்னித்துவிடுங்கள். நான் அந்த கோட்டை எடுத்து தூசி தட்டும்போது எங்கோ விழுந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக இன்னொரு நாணயத்தை போட்டு வைத்தேன்’ என்று கூறினாள்.
இது எப்போது நடந்தது என்று வியாபாரி கேட்க, ‘அந்த நாணயம் கிடைத்த மறுநாளே!’ என்று மனைவி பதில் கூறினாள். அமைதியாக யோசித்த வியாபாரிக்கு புரிந்தது. அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை தன்னுடைய நம்பிக்கையும், உழைப்பும்தான் என்பதை புரிந்துக்கொண்டு உற்சாகமாக அவனது பணியைத் தொடர்ந்தான்.
இந்தக் கதையில் சொன்னதுபோல, அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைப்பதை விட நம்முடைய உழைப்பின் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். முயற்சித்துப் பாருங்களேன்.