<p>தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் இயக்குநர்கள் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு சில சீன்களில் வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதன் பிறகு இயக்குநர்களே வில்லன்களாகவும் நடிக்க ஆரம்பித்தார்கள். இதையடுத்து ஹீரோக்களாகவும் நடிக்க தொடங்கினார்கள். இப்போது இயக்குநர்கள் மட்டுமின்றி இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், தயாரிப்பாளர்கள் என்று எல்லோருமே சினிமாவில் நடித்து வருகின்றனர்.</p>
<p>இதே போன்று தான் நடிகர்களும், இயக்குநர்கள், பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் என்று பல அவதாரங்கள் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இப்போது நடிகை ஒருவர் குறுகிய காலத்திலேயே சினிமாவில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, லப்பர் பந்து படத்தில் அன்புவின் ஆசை காதலியாக துர்கா ரோலில் நடித்த சஞ்சனா தான். 'ஐ ஹேட் யூ ஐ லவ் யூ 'என்ற வெப் சீரிஸ் மூலமாக அறிமுகமான சஞ்சனா, வதந்தி என்ற வெப் சீரிஸிலும் நடித்தார்.</p>
<p>அப்போது தான் லப்பர் பந்து அவருக்கு ஒரு அருமையான வாய்ப்பு கொடுத்தது. இந்த படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்து சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் கூட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.</p>
<p>தக் லைப் படத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வ்ரயா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர், சேத்தன், வையாபுரி, சின்னி ஜெயந்த் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தான் சஞ்சனா இயக்குநராக அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>