ARTICLE AD BOX

அதிமுகவை யாராலும் உடைக்கவோ முடக்கவோ முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுகவின் உட்கட்சி பூசலால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்துள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியுள்ளார்.
”சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து விட்டால் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பாராமல் சமமாக நடந்து கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்தினோம். தோல்வி அடையும் என தெரிந்தும் கொண்டுவர காரணம் நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் தீர்மானம் கொண்டு வந்தோம்.
கடந்த காலங்களில் அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தாலும் இந்த 4 ஆண்டுகளில் வாங்காத கடனை திமுக வாங்கியுள்ளது. ஆனாலும் எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதேபோல், அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கு தொடர்வோம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம். அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது; முடக்க முடியாது அதை முயற்சி செய்பவர்களுக்கு மூக்குதான் உடைந்து போகும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியுடன் பாராமுகமாக இருந்த செங்கோட்டையன் இந்த தீர்மானத்தின் வாக்கெடுப்பு குறித்து அனுபவத்தைப் பகிர்ந்து அதிமுக உறுப்பினர்களுக்கு புரிய வைத்துள்ளார். கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஒரே அணியிலிருந்து வாக்களித்துள்ளார்.கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் அதிமுக தரப்பிற்காக வாக்களித்துள்ளனர். வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிந்தாமல் சிதறாமல் வாக்களிப்பார்கள் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது. அதையொட்டியே கட்சியை உடைக்கவோ முடக்கவோ முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாகத் தெரிகிறது.