அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட காரணம் இதுதான்

9 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி - கே.ஏ.செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகள் எதுவாக இருந்தாலும் ஆளுமைமிக்க தலைவர்கள் மறையும்போது உள்கட்சி பூசல் வெடிப்பது காலாகாலமாக இருந்து வருகிறது. அதுபோன்ற நிலை ஜெயலலிதா மறைந்தபோது அ.தி.மு.க.வுக்கும் ஏற்பட்டது.

அப்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆளும் கட்சி. ஆட்சி - அதிகாரம் கையில் இருந்ததால் உள்கட்சி பூசல் வெளியே தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீதமுள்ள 4 ஆண்டு கால ஆட்சி தொடர்ந்தது. ஆனால், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், அ.தி.மு.க.வுக்குள் இருந்த உள்கட்சி பூசல் வெளியே தெரிய தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிப்பாளையம் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) 9-ந் தேதி கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்துக்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான விளம்பர போஸ்டரில் எடப்பாடி பழனிசாமியை தவிர அ.தி.மு.க. தலைவர்கள் புகைப்படம் எதுவும் இடம்பெறவில்லை என்று கூறி அந்தக் கூட்டத்தை கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார்.

அப்போது இந்த பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து பிப்ரவரி 24-ந் தேதி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிலும் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. தற்போது, சட்டசபை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாள் அங்குள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்த கே.ஏ.செங்கோட்டையன், 2-வது நாள் சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து, அன்றைக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஆவேசமான அவர், "இதுகுறித்து அவரிடமே (கே.ஏ.செங்கோட்டையன்) கேளுங்கள்" என்று கேள்வியை திருப்பிவிட்டார். சபாநாயகருடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த கே.ஏ.செங்கோட்டையன்,."தொகுதி சார்ந்த பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுப்பதற்காக சந்தித்தேன்" என்று கூறினார்.

இவை அனைத்தையும் பார்க்கும்போது அ.தி.மு.க.வில் என்னதான் நடக்கிறது? என்று அக்கட்சி தொண்டர்களுக்கு மட்டும் அல்ல, தமிழக மக்களுக்கும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, அ.தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது விரிவான தகவல்கள் வெளியானது.

அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், கே.ஏ.செங்கோட்டையனும் ஒரே சமுதாயத்தை, அதாவது கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் நீண்ட பல ஆண்டுகளாக கோலோற்றி வருகிறார். அவரது ஆதரவாளர்களே கட்சிப் பதவிகளில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கே.ஏ.செங்கோட்டையன் ஆதரவாளர்களை புறக்கணித்துவிட்டு, புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்து வந்தார். மேலும், தனது மகன் கதிரீஸ்வரனுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை 'சீட்' கேட்டு பார்த்து, அதுவும் கிடைக்காததால் கே.ஏ.செங்கோட்டையன் கடும் கோபம் அடைந்தார்.

தற்போது, கொடிவேரி அணைக்கு அருகே பவானி ஆற்றங்கரையில் கீழ்பவானி பாசன ஆயக்கட்டு நிலத்தில் தனியார் சாய ஆலை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இதற்கு அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மக்கள் பிரச்சினைக்கு ஆதரவு அளித்து அ.தி.மு.க. தரப்பில் கண்டன அறிக்கையும், ஆர்ப்பாட்ட அறிவிப்பும் வெளியிட கட்சித் தலைமையை கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை.

இதனால், கடும் அதிருப்திக்கு உள்ளான கே.ஏ.செங்கோட்டையன், இதுவரை மக்கள் மத்தியில் நமக்கு இருந்த நன்மதிப்பு குறைந்துவிடுமோ? என்று எண்ணி, தனது எதிர்ப்பை வெளிக்காட்ட தொடங்கியுள்ளார். தனியார் சாய ஆலை பிரச்சினை தொடர்பாகத்தான் நேற்று முன்தினம் அவர் சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானதாக எடுத்துக்கொண்டு அவையில் விவாதிக்குமாறு மனு கொடுத்துள்ளார். அதுதான் அன்றைக்கு சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு முயற்சி மேற்கொண்ட கே.ஏ.செங்கோட்டையன், தற்போது தனது வெற்றியை மட்டும் உறுதி செய்தால்போதும் என்ற நிலைக்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான், தனி ஒருவனாக சாய ஆலை பிரச்சினையை

கையில் எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கு தொடர்வதால், "அ.தி.மு.க.வை விட்டு வெளியேறும் முடிவை கே.ஏ.செங்கோட்டையன் முடிவெடுப்பாரா?" என்ற கேள்விக்கு அவரது ஆதரவாளர்கள், "அவர் என்றைக்கும் அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசி" என்று தெரிவித்தனர்.

எனவே, எடப்பாடி பழனிசாமி - கே.ஏ.செங்கோட்டையன் இடையேயான மோதல் போக்கு சட்டசபை தேர்தலுக்கு முன்பு முடிவுக்கு வருமா?, அல்லது கன்னித்தீவு கதைபோல தொடருமா? என்பது போகப்போகத்தான் தெரியவரும்.


Read Entire Article