ARTICLE AD BOX
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் அதிமுக தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் ஜெயலலிதாவின் புகழை போற்றி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே அதிமுகவை திரும்பி பார்க்கும் வகையில் புதிய உச்சத்தை தொடவைத்தவர். நாடாளுமன்றத்தில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்தவர், தமிழகத்தில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்து அசத்தியவர்.
கடந்த 2017ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் காலமானார். இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட பல குழப்பங்களால் இன்னும் பல தலைவர்கள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பாக அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுக சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவசிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மக்களால் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் தவவாழ்வால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் "அம்மா" என்று அன்புடன் அழைக்கப்பெறும் நம் ஒப்பற்றத் தலைவி, அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாளில், நம் உயிர்நிகர் அம்மா அவர்களின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.

"எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் இதயதெய்வம் அம்மா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி, தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயம், தமிழக மக்களின் துயர் துடைத்த தங்கதாரகை, தமிழக மக்களால் மனதார அம்மா என அழைக்கப்பட்ட வரலாற்றுத் தலைவி நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் இன்று.
எத்தனை இடர்பாடுகள் குறுக்கிட்டாலும், தடைகள் பல நேரிட்டாலும் அகிலமே வியந்து பாராட்டும் அளவிற்கு எண்ணற்ற நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்கள் பிறந்த இந்நாளில் மக்களை வஞ்சித்து ஏமாற்றும் திமுக அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என கூறியுள்ளார்.