அதிமுக உடன் பாமக கூட்டணி அமைக்கிறதா? கழற்றி விடப்படுகிறதா பாஜக? ராமதாஸ் போடும் கணக்கு என்ன.?

3 days ago
ARTICLE AD BOX

தமிழக அரசியலில் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு மாறி வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அதிமுகவுடன் இணைய ராமதாஸ் காய் நகர்த்துவதாக தகவல்.

அதிமுக உடன் பாமக கூட்டணி அமைக்கிறதா? கழற்றி விடப்படுகிறதா பாஜக?

தமிழகத்தில் திராவிட கட்சிகளே மீண்டும், மீண்டும் ஆட்சி அமைத்து வரும் நிலையில், அந்த கட்சிகளுக்கு போட்டியாக பல கட்சிகள் அரசியல் களத்தில் இறங்கியது. அதன் படி பாமக, தேமுதிக, மநீம, தவெக ஆகிய கட்சிகளும் எதிராக களம் இறங்கியது. ஆனால் வருடங்கள் செல்ல, செல்ல ஒரு சில தேர்தல்களுக்கு பிறகு மீண்டும் தனித்து போட்டியிட முடியாத காரணத்தால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளோடே கூட்டணி அமைத்தது. அந்த வகையில் திமுக- அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளை நம்பியே பல கட்சிகள் உள்ளது. 

மாறி மாறி கூட்டணி அமைக்கும் பாமக

அதிலும் பாமக ஒவ்வொரு தேர்தலிலும் மாறி, மாறி கூட்டணி அமைத்து வருகிறது. ஒரு முறை திமுகவுடன் கூட்டணி என்றால், மறுமுறை அதிமுக, அடுத்த முறை பாஜக என தங்களது நிலைப்பாட்டை மாற்றி வருகிறது. அதன் படி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பிடித்திருந்த பாமக,

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதியை பெற்று போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவியது. அப்போது அதிமுக கூட்டணியில் இணையும் படி பாமகவிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பாமக தலைவராக உள்ள அன்புமணி அதிமுக கூட்டணியை உதறி தள்ளிவிட்டு பாஜகவில் இணைந்தார்.

ஏமாற்றிய பாஜக

அந்த வகையில் பாஜக வெற்றி பெற்றால் மத்தியில் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதியையும் பாஜக கைப்பற்றாத காரணத்தால் எந்தவித பொறுப்பும் அன்புமணிக்கு கிடைக்காமல் போனது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என ராமதாஸ் விரும்பிய நிலையில், அன்புமணி பாஜகவில் கூட்டணியில்  இணைந்தார்.

எனவே ஆரம்பத்தில் இருந்து தொடங்கிய மோதல் இந்த கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ்- அன்புமணிக்கு இடையே மோதல் அதிகரித்தது. இந்த நிலையில் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறியாக வைத்து பாமக அடுத்தக்கட்ட திட்டம் வகுத்து வருகிறது.

அதன் படி ஜூன் மாதம் அன்புமணியின் ராஜ்யசபா பதவி காலம் முடிவடையவுள்ளது. எனவே அவருக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என அதிமுகவிடம் பாமக தலைவர்கள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்படி வழங்கும் பட்சத்தில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத அதிமுக தற்போது தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் வழங்க இருப்பதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மற்ற கட்சிகளுக்கே ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டால் அதிமுகவில் உள்ள நிர்வாகிகளுக்கு எப்போது கொடுப்பது என எதிர் கேள்வி கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக கூட்டணிக்கு காய் நகர்த்தும் பாமக

எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தொகுதிகளின் அடிப்படையில் ராஜ்யசபா சீட் ஒதுக்குவது பற்றி பின்னர் முடிவெடுக்கலாம் என அதிமுக வட்டாரத்தில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக அங்கிருந்து விலகி 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறியாக வைத்து அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.


 

Read Entire Article