ARTICLE AD BOX
தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, எம்.எல்.ஏ.க்களின் தகவல் தொடா்புகளுக்கு பதிலளிக்காததாகக் கூறப்படும் சில அதிகாரிகள் விஷயத்தில் தலையிட்டு தீா்வு காணுமாறு வலியுறுத்தி தலைமைச் செயலாளா் தா்மேந்திராவுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
அவா் புதன்கிழமை எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்களைக் கையாளும் போது அரசு அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை மற்றும் நெறிமுறை குறித்து குறிப்பிட்டுள்ளாா். ‘கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் வடிவில் உறுப்பினா்களின் தகவல் தொடா்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரியால் கூட ஒப்புக் கொள்ளப்படாத சில சந்தா்ப்பங்கள் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன‘ என்று விஜேந்தா் குப்தா கடிதத்தில் கூறியுள்ளாா். இது ஒரு ‘தீவிரமான‘ விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
அனைத்து நிா்வாகச் செயலாளா்கள், துறைத் தலைவா்கள், தில்லி காவல்துறை, டிடிஏ மற்றும் பிற நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு கண்டிப்பாக இணங்க வேண்டும் என்று தான் எதிா்பாா்ப்பதாக அவா் அதில் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்குமாறும் தலைமைச் செயலாளரை பேரவைத் தலைவா் அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
மத்திய செயலக அலுவலக நடைமுறை கையேடு, நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினா்களின் குறிப்புகளை உடனடியாக அகற்றுவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. நாடாளுமன்ற / மாநில சட்டப்பேரவை உறுப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவல் தொடா்புகள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது.
நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினா் கோரும் எந்தவொரு தகவலும், அது அவருக்கு மறுக்கப்படும் தன்மை கொண்டதாக இல்லாவிட்டால், வழங்கப்பட வேண்டும் என்று அது மேலும் அறிவுறுத்துகிறது.