ARTICLE AD BOX
அறிவாலயத்தை ஏதோ செய்வேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது; ”தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் இருக்கு தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. கல்வி தொடர்பானது. பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார் அண்ணாமலை. தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் வாங்கித் தர முடியவில்லை. இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். 2018 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த மோடி சுவற்றை எல்லாம் உடைத்துக் கொண்டு திருட்டுத்தனமாகச் சென்றார்.
வீட்டில் சுவரொட்டி ஒட்டுவதாக அண்ணாமலை சொல்லியிருக்கிறார். போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? வரச் சொல்லுங்க, நான் வீட்டுகிட்ட தான் இருப்பேன். இன்று மாலை இளைஞரணி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அறிவாலயத்தை ஏதோ செய்வேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க.
மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது. தனியார் பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதை இதனுடன் தொடர்புபடுத்த வேண்டாம். தனியார் பள்ளி நடத்துபவர்கள் மத்திய அரசிடம் தகுந்த அனுமதி பெற்றே நடத்துகிறார்கள். தனியார் பள்ளியில் இலவச உணவு, சீருடை கொடுக்கிறார்களா? தனியார் பள்ளி நடத்துபவர்களை பா.ஜ.க, தலைவர்கள் விமர்சிப்பதே தவறானது.
மத்திய அரசிடம் இருந்து நிலுவைத் தொகையை பெறுவது தொடர்பாக தலைவருடன் பேசி முடிவெடுப்போம். எங்களின் தோழமை கட்சிகளும் முடிவெடுப்பார்கள். இன்று மாலை இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதிலும் இது பற்றி பேசி முடிவெடுப்போம்.
தமிழக விளையாட்டு வீரர்கள் வாரணாசி சென்று விட்ட, ரயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தமிழகம் திரும்ப முடியாத நிலையில் இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவில் கூட்டத்தை சமாளிக்க தெரியாமல் உத்திரபிரதேச பா.ஜ.க அரசும், மத்திய அரசும் திணறி வருகின்றன. எத்தனை பேர் நெரிசலில் உயிரிழந்தார்கள், எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை பகிராமல் இருக்கிறார்கள்.” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.