ARTICLE AD BOX
நிலவின் மேற்பகுதியில் சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பெரிதான மரியா எனும் பகுதியில் நீர் உறைந்த நிலையில் பனிக்கட்டியாக இருப்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
1645ஆம் ஆண்டில், டச்சு வானியலாளர் மைக்கேல் வான் லாங்ரென் நிலவின் முதல் அறியப்பட்ட வரைபடத்தை வெளியிட்டார். அதில் கருப்பு நிற நிழலாடும் பகுதியை மரியா என குறிப்பிட்டார். லத்தீன் மொழியில் மரியா என்பது கடலை குறிப்பதாகும்.
நூற்றுக்கணக்கான விண்கற்கள் பல ஆண்டுகளாக நிலவின் மீது மோதியதன் காரணமாக மரியா பள்ளத்தாக்கு உருவானதாக அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்டன. 1994 ஆம் ஆண்டு நாசாவின் கிளெமெண்டைன் விண்கலம் சேகரித்த தரவுகளின்படி, சந்திரனின் மரியா பள்ளத்தாக்கில் பனி இருப்பதாக விண்கலத்தின் தரவுகள் தெரிவித்தன.
அதன் பிறகு சந்திரனை நோக்கிய எந்த ஆய்வும் 14 வருடமாக மேற்கொள்ளப்படாத நிலையில் இந்தியாவின் சந்திரயான்-1 ல் இருந்த நாசாவின் மூன் மினரலஜி மேப்பர் (M3) இலிருந்து பெறப்பட்ட தரவின்படி, நிலவின் மரியா பகுதியில் சூரிய ஒளி உள்புகாத அளவிற்கு பள்ளப் பகுதிகள் இருப்பதால் நீர் பனிக்கட்டியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சந்திரயான் 1 தரவுகளை மேலும் பகுப்பாய்வு செய்ததில் நிலவின் ஒரு கன அடி மண்ணுக்குள் 12-அவுன்ஸ் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆய்வுகள் மேற்கொண்டதில், நிலவின் நீர் மூலக்கூறான H2O மரியா பகுதியில் இருந்து, சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய தென் துருவம் வரை நீர் மூலக்கூறுகள் மண்ணுக்கு அடியில் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பூமியில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பரப்பில் பெரியது என கருதப்படுகிறது.
சந்திரனில் ஒரு காலத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததும் எரிமலை வெடிப்பு குறைந்த பின்னர் மேற்பரப்பில் இருந்த நீர் ஆவியானதும் ஆனால் அடிப்பகுதியில் இருந்த நீர் பனிக்கட்டியாக உறைந்த நிலையில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா அடுத்ததாக அனுப்பவுள்ள சந்திரயான் 4 திட்டம் நிலவின் மேற்பரப்பில் மண் துகள்களை எடுத்து வரும் திட்டம் என்பதால் அதன் மூலம் நீர் மூலக்கூறுகளை இன்னமும் உறுதியிட்டு ஆய்வு செய்ய முடியும் என நம்பப்படுகிறது.