ARTICLE AD BOX
அடுத்தவர்களுக்கு உதவி செய்வது, அவர்கள் மீது இரக்கப்படுவது என்பது தவறில்லை. ஆனால், சில சமயங்களில் மற்றவர்களின் குணம் அறிந்து உதவி செய்வது நல்லதாகும். எல்லோரையும் ஒரே மாதிரி நினைத்து உதவி செய்துவிட்டு பின்பு அவர்களின் குணம் தெரிந்த பின்பு வருத்தப்படுவது சரியாகாது. இதை தெளிவாகப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் காட்டில் வாழ்ந்து வந்த புலிக்கு நன்றாக அடிப்பட்டுவிட்டது. அது எழுந்திருக்கவே முடியாமல் விழுந்துக் கிடந்தது. இப்படியிருக்கையில், ஒரு மருத்துவர் அந்த வழியாக நடந்து சென்றிருக்கிறார். அப்போது அடிப்பட்டு கிடந்த புலியைப் பார்த்து இரக்கப் பட்டிருக்கிறார்.
‘நாம் மருத்துவம்தானே படித்திருக்கிறோம். ஒரு உயிர் வலியுடன் இருக்கும்போது அதை காப்பாற்றுவதுதானே நம் பொறுப்பு ‘என்று நினைத்து அந்த புலிக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார். ஒருநாள், இரண்டு நாள் இல்லாமல் ஒருவாரம் முழுவதும் உட்கார்ந்து அந்த புலிக்கு கட்டுப்போட்டு, மருந்து தந்து அதை பத்திரமாக கவனித்துக் கொண்டிருக்கிறார். அந்த புலி மறுபடியும் பழையபடி ஆரோக்கியமாக எழும் அளவிற்கு செய்திருக்கிறார். அவருடைய மருத்துவமும் பலித்தது, புலியும் எழுந்தது. அந்த புலி எழுந்த அடுத்த நொடி அந்த மருத்துவரையே அடித்து சாப்பிட்டிருக்கிறது.
இதில் ஆச்சர்யப்படுவற்கு ஒன்றும் இல்லை. ஒரு புலியின் குணம் அதுதான். அதற்கு நல்லவர்கள், கெட்டவர்கள் என்று தெரியாது. தனக்கு உதவியவர்கள், உதவாதவர்கள் என்று தெரியாது. இதுப்போல தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களின் சுபாவமே அதுதான். நீங்கள் செய்த உதவியாலேயே எழுந்துவிட்டு உங்களுக்கு எதிராகவே திரும்பி விடுவார்கள்.
அதனால்தான் ஒருவருக்கு உதவி செய்யும் போது முன் பின் யோசித்து உதவ வேண்டும் என்று சொல்லப் படுகிறது. உதவி செய்வது தவறில்லை. யாருக்கு செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும். அந்த நபரின் குணம் அறிந்து, மனம் அறிந்து உதவுவது சிறந்தது. இதை புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்களேன்.