இந்தியாவில் சில்லறை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் ஜனவரி மாதத்தில் 4.31 சதவீதமாக இருந்த பணவீக்கம், பிப்ரவரி மாதம் 3.61 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல இந்த மார்ச் மாதத்திலும் சில்லரை பணவீக்கம் 3.98 சதவீதமாக இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சில்லறை பணவீக்கம் என்றால் என்ன?: சில்லறை பணவீக்கம் என்பது இந்தியாவில் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்ந்திருக்கிறதா? அல்லது குறைந்திருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்கும் கணக்கீடு என்று சொல்லலாம். நாம் வாங்கும் மளிகை பொருட்கள், இரும்பு சாமான்கள், உடைகள் மற்றும் நாம் பெரும் சேவைகளான மருத்துவ சேவைகள், கல்விச் செலவுகள் என அனைத்திற்குமான செலவு அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை இந்த பணவீக்க விகிதத்தை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

சில்லறை பண வீக்கத்தை அளவிடுவதற்காக பயன்படுத்தப்படுவது தான் சிபிஐ என்று சொல்லப்படுகிற நுகர்வோர் விலை குறியீடு. இந்த குறியீட்டின் மூலம் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் சராசரி விலையை கணக்கிட்டு.. அதன் பிறகு சில்லரை பணவிக்க விகிதம் அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும்.
சில்லறை பணவீக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணம் உணவுப்பொருட்களின் விலை குறைந்தது தான். ஏனெனில் சில்லறை பணவிக்கத்தில் கிட்டத்தட்ட 50 சதவீதம் உணவுப் பொருட்களின் விலை அடிப்படையில் தான் இருக்கும். பிப்ரவரி மாதத்தில் உணவுப் பணவீக்கம் 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. மே 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுதான் மிகக் குறைவான விகிதம் என்று அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கிறது. காய்கறி பணவீக்கம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.07 சதவீதம் குறைந்துள்ளது.
பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த கூட்டத்தில் உணவுப் பொருட்களின் விலை சாதகமாக இருந்ததால் பணவீக்கம் குறைந்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது. அதேபோல 2025 முதல் 2026-ஆம் நிதியாண்டிலும் பணவீக்க விகிதம் குறையும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. இது இந்திய குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
பணவீக்க விகிதத்தை 2 முதல் 6 சதவீதத்திற்குள் வைத்திருப்பதே ரிசர்வ் வங்கியின் கடமை. இந்நிலையில் ஆர்பிஐ-இன் புதிய கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் 2026-ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 4.2 சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது.