ARTICLE AD BOX
அட பட்ஜெட்னா இப்படி இருக்கணும்! இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க! இனி பணப் பற்றாக்குறையே வராது!
சாணக்கியர் சேமிப்பு என்பது உண்மையான நண்பன் என்று கூறியுள்ளார். உறவுகளே விட்டுச் சென்றாலும் மோசமான சூழ்நிலையில் பணம் கை கொடுக்கும். ஒவ்வொருவரும் முடிந்தவரை சேமிக்க முயற்சிக்க வேண்டும். மோசமான காலங்களில் சேமித்த பணத்தின் மூலம் உங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யலாம். வேலை செய்பவராக இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி சேமிப்பு இல்லை என்றால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து தெரிந்த அனைவருக்கும் எழும் அடுத்த கேள்வி என்னவென்றால் சம்பளத்தில் எவ்வளவு சேமிப்பது? என்பது தான். எவ்வளவு எடுத்து வைத்தாலும் உடனே காலி ஆகிவிடுகிறது என்று புலம்புபவர்கள் பலர். இதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறப்பான ஃபார்முலா உள்ளது. அதை பின்பற்றினால் போதும். இந்த ஃபார்முலாவை வைத்து ஒரு பட்ஜெட்டை உருவாக்கினால் ஒருபோதும் பணப்பற்றாக்குறை வராது.

50/30/20: இந்த விதியை ஏற்கனவே சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலருக்கு புதிதாக இருக்கலாம். சம்பாதிப்பது, செலவு செய்வது, சேமிப்பது ஆகியவற்றை தான் இந்த ஃபார்முலா குறிக்கிறது. பட்ஜெட் அடிப்படையில் இந்த விதியை பின்பற்றினால் உங்களுடைய எல்லா வேலைகளையும் எளிதாக செய்யலாம். எதிர்காலத்தில் உங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.
இந்த விதியின் படி முதலில் இருக்கும் 50 என்பது குடும்பத்தின் அத்தியாவசிய செலவுகளை குறிக்கிறது. அடுத்து வரும் 30 என்பது பொழுதுபோக்கு செலவுகளை குறிக்கிறது. இது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக குடும்பத்துடன் ஒரு திரைப்படம் பார்க்க செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்காக நீங்கள் செய்யும் செலவுகள் ஆகட்டும் அல்லது ஷாப்பிங் செய்ய நீங்கள் செய்யும் செலவுகள் ஆகட்டும் அனைத்தும் இந்த 30 சதவீத செலவினங்களின் கீழ் தான் வரும். மீதமுள்ள 20 சதவீதம் என்பது சேமிப்பை குறிக்கிறது. இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.
நீங்கள் ரூ. 80,000 சம்பாதிப்பவர் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய சூழலில் உங்கள் சம்பளத்தை 50/30/20 என்ற விதியின் படி பிரிக்கவும். ரூ.80,000-த்தில் 50 சதவீதம் என்றால் ரூ. 40,000. இது கண்டிப்பாக அத்தியாவசிய வீட்டுச் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். மளிகை சாமான்கள், எலக்ட்ரிசிட்டி பில், வீட்டு வாடகை, இதர செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.
மீதமுள்ள 30 சதவீதம் அதாவது 24,000 ரூபாய் உங்கள் பொழுதுபோக்கு செலவுகளை செய்து கொள்ள வைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 20% அதாவது ரூ.16,000த்தை சேமிக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். அனைவருமே இந்த விதியை பயன்படுத்தி தங்கள் வருமானத்தை பிரித்தால் மீதமுள்ள தொகையை சேமிக்க முடியும். ஆக இந்த உதாரணத்தில் வருவது போல் மாதம் ஒருவர் 16,000 ரூபாயை தங்களுக்கானது இல்லை என்று சேமிப்பில் போட்டு வைத்திருந்தால் வருடத்திற்கு இதுவே ரூ. 1,92,000.