ARTICLE AD BOX

அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் இந்த திரைப்படம் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'இட்லி கடை' படத்துடன் நேரடியாக மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'விடாமுயற்சி' படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'விடாமுயற்சி' திரைப்படம் தள்ளிப் போனதால் 'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் 'குட், பேட் அக்லி' ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்று அவரது, அஜித்தின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துடைய பெரும்பாலான காட்சிகள் நிறைவு பெற்று டப்பிங் பணிகளையும் அஜித் முடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
#GoodBadUglyFromApril10 pic.twitter.com/rjNeQwLCnW
— raahul (@mynameisraahul) February 20, 2025
இந்நிலையில், 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என பிரபல விநியோகஸ்தரான ராகுல் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தின் 'விவேகம்', 'விசுவாசம்' படங்களின் விநியோகஸ்தராக இருந்தவர். 'குட் பேட் அக்லி' படத்துடைய அப்டேட்டுகளை ராகுலிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், அவர் இந்த திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வியாழன் என்று வெளியாகும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.