ARTICLE AD BOX
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் அவருடைய அணி பங்கேற்றது. பந்தயத்துக்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து போட்டியில் இருந்து அவர் விலகினாலும் அவருடைய அணி பங்கேற்று 3-ம் இடத்தை தட்டிச் சென்றது.
சமீபத்தில் நாட்டுக்கான அவருடைய சேவையை பாராட்டும் விதமாக மத்திய அரசு பத்ம பூஷண் விருது அறிவித்து கவுரவப்படுத்தியது.
சமீபத்தில் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆன பிறகு மீண்டும் அவர் கார் பந்தயத்தில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது அஜித்குமார் ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா நகரில் நேற்று நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்று அவருடைய காரில் சீறிப் பாய்ந்தார். அப்போது போட்டியில் அஜித்குமார் தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரை முந்துவதற்கு முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகி 'பல்டி' அடித்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அஜித்குமாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது ? என்று அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
6-வது சுற்றில் முன்னே சென்ற கார் திடீர் என நின்றதால் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் அஜித் மீது எந்த தவறும் இல்லை என அவரது காரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகள் காட்டுகிறது. அஜித் குமார் நலமுடன் உள்ளார். காயமின்றி வெளியேறிய அவர், மீண்டும் பந்தயத்தில் ஈடுபடுவார். அவருக்காக அவர் மீது அக்கறையுடன் பிரார்த்தித்தவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா ரம்யா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.