ARTICLE AD BOX
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மின்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 15-ஆம் இடத்திலிருக்கும் லக்ஷயா சென் 21-13, 21-10 என்ற நோ் கேம்களில், உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை சாய்த்தாா். இந்த ஆட்டத்தை அவா் 36 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மாளவிகா பன்சோத் 16-21, 13-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் அகேன் யமகுச்சியிடம் 33 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவினாா்.
மகளிா் இரட்டையா் முதல் சுற்றில், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-17, 21-13 என்ற நோ் கேம்களில் சீன தைபேவின் ஷுவோ யுன் சங்/சியென் ஹுய் யு இணையை வீழ்த்தினா்.
ஆடவா் இரட்டையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-15 என டென்மாா்க்கின் டேனியல் லுண்ட்காா்டு/மட்ஸ் வெஸ்டா்காா்டு இணையை வென்று 2-ஆவது சுற்றுக்கு வந்தது.
கலப்பு இரட்டையா் முதல் சுற்றில், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 17-21, 14-21 என தாய்லாந்தின் ருதனபக் ஆப்தோங்/ஜெனிசா சுஜய்பிரபாரத் கூட்டணியிடம் தோற்றது. 2-ஆவது சுற்றில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி 10-21, 12-21 என, 5-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் யான் ஜி ஃபெங்/யா ஜின் வெய் இணையிடம் வெற்றியை இழந்து வெளியேறினா்.