ARTICLE AD BOX
செய்தியாளர் மணிகண்டன்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோகன்லால் என்பவரின் 17 வயது மகன் ஃப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமையாகி தொடர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பெற்றோரின் பேச்சை கேட்காமல் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்ததால் ஈரோட்டில் உள்ள உறவினர் நரேஷ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இங்கும் சிறுவன் செல்போனில் ஃப்ரீ பயர் விளையாட்டை தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஓம்பிரகாஷின் செல்போன் பழுது ஏற்பட்ட நிலையில் அதனை உறவினர் நரேஷ் சரிசெய்து கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட சிறுவன், கடந்த 30ஆம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறுவனை காணவில்லை என்று நரேஷ் கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவன், சங்ககிரி வரை நடந்தே சென்றது தெரியவந்தது.
உத்தரப்பிரதேசத்தில் சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த சிறுவனை மீட்டு பத்திரமாக அழைத்துவந்துள்ள உறவினர்கள், செல்போனில் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி, சிறுவன் தனது படிப்பையே தொலைத்துவிட்டதாக வேதனை தெரிவிக்கிறார்கள். இக்கால குழந்தைகளின் உலகமே செல்போனுக்குள் சுருங்கிவிட்ட நிலையில், அவர்களை அதிலிருந்து மீட்டு உலகத்தை அறிமுகம் செய்யவேண்டிய கட்டாயத்தையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.