ARTICLE AD BOX
இந்தியாவில் ஆண்களுக்கான ஐபிஎல் போன்று வீராங்கனைகளுக்கு Women's Premier League என்ற பெயரில் ஐபிஎல் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடுகின்றன.
மகளிர் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 6வது ஆட்டத்தில் உபி வாரியஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் வதோராவில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த உபி வாரியஸ் அணி 20 ஓவர்களில் 166 ரன்கள் குவித்தது. கிரண் நவ்கிரே 27 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 51 ரன்கள் அடித்தார். கடைசி கட்டத்தில் சினெல்லே ஹென்றி 15 பந்தில் 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசி ஸ்கோர் உயர வழிவகுத்தார். டெல்லி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்பு சவாலான இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. ஷஃபாலி வர்மாவும், கேப்டன் மெக் லானிங்கும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். 7 ஓவர்களில் 65 ரன்கள் அடித்த நிலையில், ஷஃபாலி வர்மா 16 பந்தில் 26 ரன் எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் மெக் லானிங் பவுண்டரி மழை பொழிந்தார். அவர் 49 பந்தில் 12 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் விளாசினார். பின்பு வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் டக் ஆனாதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.
ஆனால் கடைசியில் சூப்பராக விளையாடிய அன்னாபெல் சதர்லேண்ட் (35 பந்தில் 41 ரன்), மாரிசேன் காப் (17 பந்தில் 29 ரன்) இருவரும் அணியை வெற்றி பெற வைத்தனர். டெல்லி அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பந்துவீச்சில் 2 விக்கெட், பேட்டிங்கில் 41 ரன் என ஆல்ரவுண்டராக கலக்கிய அன்னாபெல் சதர்லேண்ட் ஆட்டநாயகி விருது வென்றார். 3வது போட்டியில் விளையாடிய டெல்லி அணிக்கு இது 2வது வெற்றியாகும். அதே வேளையில் உபி வாரியஸ் அணி விளையாடிய 2 ஆட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளது. ஆர்சிபி அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.