ARTICLE AD BOX
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், "பெர்க்ஷயர் ஹாத்வே" என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான வாரன் பஃபெட் தன் வருடாந்திரப் பங்குதாரர் அறிக்கையில் பல செய்திகளை வலியுறுத்தியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஒரு விஷயத்தில் தவறுகள் நடப்பது பிரச்னையல்ல. அதை சரிசெய்யாமல் இருப்பதுதான் தவறு. பெர்க்ஷயர் நிறுவனத்தில் என்னால் பல தவறுகள் நடந்திருக்கிறது. அதனால் பல சிக்கல்களை எதிர்க்கொண்டிருக்கிறேன். சில வணிகங்களின் எதிர்கால வாய்ப்புகளை தவறாக மதிப்பிட்டது, மூலதன ஒதுக்கீடு தவறாகிவிட்டது, மேலாளர்களை பணியமர்த்தும்போது, அவர்களின் திறன், நேர்மையை மதிப்பிடுவதில் பிழைகளை செய்தது எனத் தொடர்ந்து பலமுறை தவறுகள் நடந்திருக்கிறது.

விசுவாசமானவர்கள், நம்பிக்கையானவர்கள் என நம்பியவர்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், நிதி இழப்புக்கு அப்பால் காயப்படுத்தக்கூடியவை. அதாவது தோல்வியுற்ற திருமண வாழ்க்கையைப் போன்ற ஒரு வலி. எனவே, தவறுகளைச் செய்வதை ஒரு தடையாகக் கருதக் கூடாது. தவறுகளால் ஏற்படும் சிக்கல்களையும் தவிர்க்க முடியாது. ஆனால், எவ்வளவு சங்கடமானதாக இருந்தாலும் அவற்றுக்கு தகுந்த நடவடிக்கை தேவை. நான் பெரிய பொது நிறுவனங்களின் இயக்குநராக இருந்திருக்கிறேன். அங்கு நடக்கும் கூட்டங்கள், ஆய்வாளர்கள் சந்திப்புகளில் 'தவறு' என்ற வார்த்தை தடைசெய்யப்பட்ட வார்த்தைகளாக இருந்தன.
நிர்வாக பரிபூரணத்தைக் குறிக்கும் அந்த வார்த்தைத் தடை எப்போதும் என்னை பதற்றப்படுத்தியது. மற்ற நிறுவனங்களில் ஆண்டறிக்கை என்பது மகிழ்ச்சியான செய்திகளைப் பகிரும் களமாகப் பயன்படுத்தப்படுகிறது. தங்களின் தவறுகளை ஒப்புக்கொள்வதைத் தவிர்க்க முனைகிறார்கள் என்பதையே அது குறிக்கிறது. ஆனால், முக்கிய பாவம் தவறுகளைத் திருத்துவதை தாமதப்படுத்துவதுதான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவரின் 15 பக்க அறிக்கையில் 13 முறை 'Mistake' என்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். வாரன் பஃபெட்டின் இந்த அணுகுமுறை, அவரின் வெளிப்படைத்தன்மைக்கான நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது என்கின்றனர் முதலீட்டாளர்கள்.
வாரன் பஃபெட்டின் வலதுகை... ரூ.22,000 கோடிக்கு அதிபதி... சார்லி மங்கரின் சீக்ரெட் முதலீட்டு உத்திகள்!