ARTICLE AD BOX
துபாய்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் விளாசிய வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நட்சத்திர வீரர் விராட் கோலி சமன் செய்துள்ளார். இதுவரை ஐசிசி ஒருநாள் தொடர்களில் 23 முறை சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 242 ரன்கள் என்ற எளிய இலக்கை 42.3 ஓவர்களில் எட்டிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. சிறப்பாக ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, 111 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 51வது சதம் இதுவாகும். இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக ஏராளமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான விராட் கோலி அடிக்கும் 5வது சதம் இதுவாகும். அதேபோல் சதம் விளாசிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் விராட் கோலி சிறப்பாக விளையாடி 5வது முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐசிசி தொடர்களில் இத்தனை ஆட்டநாயகன் விருதினை எந்த கிரிக்கெட் வீரரும் வரலாற்றில் பெற்றதில்லை. அதேபோல் ஐசிசி தொடர்களில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரரும் விராட் கோலிதான்.
உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக்கோப்பை என்று மொத்தமாக சேர்த்து 14 முறை ஆட்டநாயகன் விருதை கைப்பற்றி இருக்கிறார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை விரைவாக விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.
இதுவரை 1992 முதல் 2011ஆம் ஆண்டு வரை நடந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் 58 இன்னிங்ஸில் ஆடியுள்ள சச்சின் டெண்டுல்கர், மொத்தமாக 23 போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் விளாசி இருக்கிறார். இந்த சாதனையை விராட் கோலி 2011 முதல் 2025 வரை விளையாடி 51 இன்னிங்ஸ்களில் சமன் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.