Vikatan Cartoon: 'எண்ணிப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது!' - 1987 சம்பவமும் விகடனின் எதிர்வினையும்

4 days ago
ARTICLE AD BOX

விகடனின் இணைய இதழான 'விகடன் ப்ளஸ்' இதழில் வெளியான ஒரு அரசியல் கார்ட்டூனுக்காக விகடனின் இணையதளம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசால் முடக்கப்பட்டிருந்தது. கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் வகையிலான இந்த நடவடிக்கைக்குப் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.

விகடன் நூற்றாண்டைத் தொடப்போகும் பத்திரிகை. இந்த 99 ஆண்டுக்கால பயணத்தில் இதேமாதிரியாக எத்தனையோ அடக்குமுறைகளை விகடன் எதிர்கொண்டு வென்றிருக்கிறது. அவ்வகையில், தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் கருத்துச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் 1987 இல் விகடன் மூலம் ஒரு சம்பவம் நடந்திருந்தது.

பாலசுப்பிரமணியன்
ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டதற்காக அன்றைய எம்.ஜி.ஆர் அரசு விகடனின் அப்போதைய நிர்வாக ஆசிரியர் பாலசுப்பிரமணியனைக் கைது செய்திருந்தது. விகடன் இணையதள முடக்கம் சம்பந்தமாக விகடனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த இந்து என்.ராம் போன்றவர்கள் கூட அந்த கைது சம்பவத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்திருக்கின்றனர்.
1987 ஆனந்த விகடனில் வெளியான கார்ட்டூன்
விகடன் இணையதள முடக்கம்: ``அதிகாரத்தின் வெட்கக்கேடான அத்துமீறல்" - Editors Guild of India கண்டனம்

1987 இல் என்ன நடந்தது? எதற்காக விகடனின் நிர்வாக இயக்குநரும் ஆசிரியருமான பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்? பத்திரிகைகளின் குரலை அடக்க முயன்ற அந்த நடவடிக்கையை முறியடித்து விகடன் எப்படி வென்றது போன்றவற்றை அறிய 38 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டினோம்.

29.03.1987 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் நகைச்சுவைத் துணுக்கோடு கூடிய கேலிச்சித்திரம் அட்டைப்படமாக வெளியாகியிருக்கிறது.

'மேடையில இருக்கிற இரண்டு பேர்ல யார் எம்.எல்.ஏ யார் மந்திரி?'

'ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடி கொள்ளைக்காரர் மாதிரி இருக்கிறவர்தான் மந்திரி..!'

இதுதான் அந்த நகைச்சுவைத் துணுக்கு. அதற்கு ஒரு கேலிச்சித்திரமும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த ஆனந்த விகடன் வெளியான சில நாட்களிலேயே சட்டமன்றத்தில் அந்த கார்ட்டூனை ஒரு பிரச்னையாக எழுப்பிப் பேசத் தொடங்கினர்.

காங்கிரஸைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் ஆனந்த விகடனின் கார்ட்டூன் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு அப்போதைய சபாநாயகர் பி.எச்.மனோஜ் பாண்டியன் அந்த கார்ட்டூனுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, "அடுத்து வரும் ஆனந்த விகடன் இதழின் முதல் பக்கத்திலேயே வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் உரிமைக் கமிட்டி விசாரணை இல்லாமலேயே சட்டசபை தண்டனையைத் தீர்மானிக்கும்" என்றார்.

இது சம்பந்தமாக 05-04-1987 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஒரு தலையங்கம் வெளியாகியிருக்கிறது. எண்ணிப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது எனத் தொடங்கும் அந்த தலையங்கத்தில், 'ஒரு கொலைகாரனுக்குக்கூட, இந்தியச் சட்டம் அவன் பக்க நியாயத்தை விளக்கத்தைக் கூற ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறது! ஆனால், நம் மதிப்புக்குரிய சபாநாயகரோ 'என்ன, ஏது' என்று விளக்கமளிக்க ஒரு சந்தர்ப்பத்தைக்கூட எனக்கு அளிக்காமல் 'மன்னிப்புக் கேள் - அதாவது குற்றத்தை ஒப்புக்கொள். இல்லையென்றால் தண்டனை அளிக்கிறேன்' என்று தீர்ப்பு கூறியிருக்கிறார். இது ஒருவகை மிரட்டலே! குற்றவாளியா, இல்லையா என்ற நீதி விசாரணையின்றி எடுத்த எடுப்பிலேயே 'தண்டனை' என்கிற மிரட்டல்!' என ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்.

பாலசுப்பிரமணியன்
தலையங்கம்
BJP: "உபா சட்டம் முதல் விகடன் இணையதள முடக்கம் வரை... பாஜக ஆட்சியின் ஒடுக்குமுறை" - தமுஎகச கண்டனம்

அதே தலையங்கத்தில் மேலும், 'நம் கைவசம் பதவியும் அதிகாரமும் இருக்கிறது. விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம்' என்று தமிழக சபாநாயகர் தீர்மானித்தால் சந்தோஷமாகத் தண்டனை கொடுக்கட்டும். அப்படிச் செய்வதனால், 'ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் தான்' என்கிற வாதத்தையே மேலும் வலுப்படுத்தும்! வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு வைத்துக் கொண்டு, சர்வாதிகார மனப்பான்மையோடு தமிழக அரசு செயல்படுகிறது என்ற எண்ணத்தையே உறுதிப்படுத்தும்!' என ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்.

காலம் கடந்தும் உயிர்ப்போடு நிற்கும் வார்த்தைகள் இவை. அப்போது மாநில அரசு விகடனின் ஆசிரியரைச் சிறையிலடைத்தது, இப்போது மத்திய அரசு விகடனை முடக்கியிருக்கிறது.

மன்னிப்புக் கேட்க மறுத்து இப்படியொரு தலையங்கம் வெளியானவுடன் 04-04-1987 இல் ஆனந்த விகடனின் நிர்வாக இயக்குநரும் ஆசிரியருமான பாலசுப்பிரமணியனுக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து சபாநாயகர் உத்தரவிடுகிறார். பாலச்சுப்பிரமணியன் அவர்கள் கைது செய்யப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அத்தனைப் பத்திரிகையாளர்களும் கொதித்தெழுந்தனர். அரசுக்கு எதிராகக் கண்டன குரல்கள் வலுவாக ஒலித்தன. கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகக் கரம் கோத்த கைகள் சிறைக்கம்பிகளைச் சுக்கு நூறாக்கின. அரசு பின்வாங்கியது. மூன்றே நாட்களின் விகடனின் ஆசிரியர் விடுவிக்கப்பட்டார்.

ஆசிரியர்
இதனைத் தொடர்ந்து 12-04-1987 அன்று வெளியான ஆனந்த விகடன் இதழின் தலையங்கத்தில், 'தண்டனையும், சிறையும் என்னைத் துளியும் காயப்படுத்த வில்லை. மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை மூன்று நாட்களுக்குள் முடிந்துவிட்டது. ஆனாலும் அது பத்திரிகை சுதந்திரத்தையே காயப்படுத்தியிருக்கிறது. இந்த வடு என்றைக்கும் மாறாது - அழியாது' என ஆசிரியர் தீர்க்கமாகக் கூறியிருந்தார். மேலும், தன்னைச் சிறையிலடைத்தது முறையற்ற விதம் என்றும் அதற்கு அடையாள நஷ்ட ஈடு வேண்டும் என்றும் பாலசுப்பிரமணியன் அவர்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
ஆசிரியர்
விகடன் இணையதள முடக்கம்: `நான் ஆனந்த விகடனுக்குத் துணை நிற்கிறேன்' - அருந்ததி ராய்

பத்திரிகைகளின் கருத்துச்சுதந்திரத்தைக் காக்கும் வகையில் 1994 இல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியதோடு விகடனின் ஆசிரியருக்கு 1000 ரூபாய் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 09-10-1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில், 'நீதிபதிகளின் தீர்ப்பில் உயரிய கோட்பாடுகள் எதிரொலித்தன.

'பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பாமல், விளக்கம் அளிக்க ஆசிரியருக்கு வாய்ப்பும் தராமல் சபாநாயகர் தண்டனையை அறிவித்தது சட்டவிரோதமானது. சபாநாயகருக்கு உள்ள பிரத்தியேக அதிகாரத்தைப் பயன்படுத்தினால்கூடத் தனி மனித உரிமையைப் பாதிக்கும் உத்தரவை அவர் பிறப்பிக்க முடியாது.'

'அரசியல் சட்டப்படி சட்டசபையின் அதிகாரங்களுக்கு வரம்பு உண்டு. வானளாவிய அதிகாரம் உள்ளதாகவும், இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக முழு அதிகாரம் இருப்பதாகவும் உரக்கக் குரல் எழுப்புவது சட்டமே இல்லாத கொடுங்கோல் ஆட்சியின் எரிச்சலூட்டும் குரலாகத்தான் இருக்குமே தவிர, அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு ஏற்றதாகவோ, ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு ஏற்றதாகவோ இருக்காது.' 'தனி மனித அடிப்படை உரிமையைப் பாதித்துள்ள இந்தப் பிரச்னையில் இயற்கை நியதி கொள்கைகளும் சட்டங்களும் கடுமையாக மீறப்பட்டுள்ளன. சபையின் முழு நடவடிக்கையுமே எதேச்சாதிகாரத்தின் வெளிப்பாடுகளாகவும், ஒடுக்குமுறைகளாகவுமே உள்ளன!'
விகடன்

இப்படிப்பட்ட தெளிவான கருத்துகளைத் தங்கள் தீர்ப்பில் கூறிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், எனக்கு அடையாள நஷ்ட ஈடாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.' எனத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர் இதன் பிறகுத் தீட்டியிருப்பது முத்திரை வார்த்தைகள்.

'சட்டமன்றங்கள், மக்களின் எண்ணங்களுக்குத் தலைசாய்க்கக் கடமைப்பட்டவை. பொறுப்புள்ள பத்திரிகைகள், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். கண்ணாடியில் தெரியும் தோற்றத்தைக் கண்டு ஆத்திரம் அடைவதும், கண்ணாடியை உடைத்தெறியப் பார்ப்பதும் ஜனநாயகத்துக்குத் துணைபோகாத செயல். மக்கள் விரோத செயல்.' அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யும் அடிப்படை பேச்சுச் சுதந்திரத்துக்கும் எழுத்துச் சுதந்திரத்துக்கும் எதிராக நிற்கும் அத்தனை அரசியலர்களுக்கும் எதிரான சாட்டையடி இது.

கொடுங்கோன்மை மிக்க அரசுகளின் எதேச்சதிகார போக்கைச் சட்டப்படி வென்று கருத்துச்சுதந்திரத்தைக் காக்கத் தீர்க்கத்தோடு போராடியதன் சாட்சியாக விகடன் ஆசிரியருக்கு வழங்கப்பட்ட அந்த 1000 ரூபாய் இன்னும் விகடன் அலுவலகத்தில் பொக்கிஷமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

பத்திரிகைகளின் ஜனநாயக குரல் ஒடுக்கப்படும்போது சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்க விகடன் எப்போதும் தயங்கியதில்லை. அதிகாரத்தின் விஷ நாக்குகளால் தீண்ட நினைப்பவர்களுக்கு 1994 இல் எங்களின் ஆசிரியர் கூறிய வார்த்தைகளைத்தான் பதிலாகக் கூற நினைக்கிறோம்.

'பொறுப்புள்ள பத்திரிகைகள், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். கண்ணாடியில் தெரியும் தோற்றத்தைக் கண்டு ஆத்திரம் அடைவதும், கண்ணாடியை உடைத்தெறியப் பார்ப்பதும் ஜனநாயகத்துக்குத் துணைபோகாத செயல். மக்கள் விரோத செயல்!' Vikatan Cartoon Row : `அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..!’ - Outlook சிறப்புக் கட்டுரை

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Read Entire Article