ARTICLE AD BOX
விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர் சங்கங்கள், இதழியலாளர்கள், எழுத்தாளுமைகள் என உலகம் முழுவதிலும் இருந்தும் விகடனுக்கு ஆதரவாகப் பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தங்களின் கண்டனங்களையும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணரும், சூழலியல் எழுத்தாளரும், திரைப்பட வரலாற்றாய்வாளரும், தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவருமான தியடோர் பாஸ்கரனிடம் பேசினோம். அப்போது, "ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகியவை அடிப்படையான அம்சங்களாக இருக்க வேண்டும். ஆனால், பேச்சுரிமையும் கருத்துரிமையும் அதிகாரத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படும். இதில் வேதனை என்னவென்றால் கருத்துரிமை பறிக்கப்படுவது கண்ணுக்கே தெரியாது. நம்மால் உணரவும் முடியாது.
ஆனால், ஒரு கட்டத்தில் முழுமையாக அடித்து ஒழித்து விடுவார்கள். இதற்குப் பிறகுதான் கருத்துரிமை இல்லை என்பது உணர முடியும். எனவேதான் நாம் கூடுதல் கவனத்துடன் இதை அணுக வேண்டும். பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு எந்த வடிவில் சிறிய அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதை மிகக் கடுமையாக நாம் எதிர்க்க வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் 'யார் மந்திரி யார்? யார் திருடன்?' என கார்ட்டூன் வெளியிட்டது.

அது சட்டமன்றம் முதல் பத்திரிகைகள் வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை மறக்க முடியாது. கார்டூன் என்பது வழமையான இதழியல் யுத்திகளில் ஒன்றுதான். இதைக் காரணம் காட்டி இணையதளத்தை முடக்குவது என்பது மிகவும் மோசமான நடவடிக்கை. நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த தடையை நீக்க வேண்டும்" என்றார்.
Vikatan Cartoon: 'எண்ணிப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது!' - 1987 சம்பவமும் விகடனின் எதிர்வினையும்
வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel