ARTICLE AD BOX
Verti Maaran: மிஷ்கினுக்கு தைரியம் அதிகம்.. சர்ச்சை பேச்சுக்கு வெற்றி மாறன் கொடுத்த சர்டிஃபிகேட்!
சென்னை: பாட்டில் ராதா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் மிஷ்கின் பேசிய பேச்சு சர்ச்சையாக மாறியது. அவர் பேசியது தொடர்பாக பலரும் அவரை விமர்சித்துப்பேசினார்கள். இது பெரும் விவாதமாகவே கோலிவுட்டில் மாறிவிட்டது. மிஷ்கின் பேசும்போது மேடையில் இருந்த பலரும் சிரித்துக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டம் வரை சிரித்துக் கொண்டு இருந்த வெற்றி மாறன், அமீர் , பா. ரஞ்சித் போன்றோர், ஒரு கட்டத்தில் மிகவும் அமைதியாகிவிட்டார்கள். இப்படியான நிலையில், மிஷ்கினின் பேச்சு குறித்து, பேட் கேர்ள் டீசர் வெளியீட்டு விழாவில் பேசும்போது வெற்றி மாறன் சில விஷயங்களைக் குறிப்பிட்டார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
பாட்டில் ராதா படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசும்போது மிகவும் சரளமாக ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். அதனால்தான் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தது. இப்படி இருக்கும்போது, பேட் கேர்ள் படத்தின் டீசர் ரிலிஸில் மிஷ்கினும் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் தான் பேசியதற்கான காரணம் குறித்து கூறினார்.
குறிப்பாக தான் உள்நோக்கத்துடன் எதையும் குறிப்பிடவில்லை. ஆனாலும் நான் பெரிதும் மதிக்கின்ற பலர் என்னை விமர்சித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மன்னிப்பினைக் கேட்டுக் கொள்கின்றேன். ஆனால் , நான் நகைச்சுவை உணர்விற்காகவே அப்படிப் பேசினேனே தவிர, யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை. நான் பேசும்போது அவையில் இருந்த பத்திரிகையாளர்களுமேதான் சிரித்தார்கள். விஷால் மீது எனக்கு கடும் கோபம் இருந்தபோது கூட நான் பொறுக்கி என்றுதான் திட்டினேன். வசைச்சொல்லை பயன்படுத்தவில்லை. ஆனாலும் கடந்த வாரத்தில் நான் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன் எனக் கூறினார்.
வெற்றி மாறன்: இப்படியான நிலையில் பேட் கேர்ள் படத்தின் டீசர் ரிலீஸ் விழாவில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், " கடந்த வாரம் மிஷ்கின் பேசியது சர்ச்சையான பின்னர், மிஷ்கின் கலந்து கொள்ளும் முதல் மேடை இது. அந்த நிகழ்வுக்குப் பின்னர், நானும் அமீரும் நீண்ட நேரம் இது தொடர்பாக பேசினோம். அதன் பின்னர் நான் மிஷ்கினுக்கு போன் செய்து எனது கருத்துக்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். உடனே அவர், நீங்கள் கூறியது புரிகின்றது வெற்றி, இது தொடர்பாக எனக்கும் சில கருத்துக்கள் இருக்கு என அவருடைய கருத்துக்களைக் கூறினார்.
தைரியம்: ஒரு நிகழ்வு நடக்கின்றது. ஆனால் அது, தவறாக மாறும்போது, அந்தத் தவறை உணர்ந்து கொண்டு திருத்திக் கொள்ளும் தைரியம் மிஷ்கினுக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த பண்பு நமது அனைவருக்கும் இருக்க வேண்டும். மற்றவர்களின் மனம் புண்படும்போது அதற்காக மன்னிப்புக் கோருவது, பொறுப்பு ஏற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது" என பேசினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
பேட் கேர்ள்: பேட் கேர்ள் படத்தின் இயக்குநர் வர்ஷா, இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மேலும் இந்தப் படத்தினை வெற்றி மாறனின் கிரஸ் ரூட் நிறுவனம் தயாரித்துள்ளது. முதலில் இந்தப் படத்தினை வழங்க ஆமேசான் நிறுவனம் முன் வந்தது. அதன் பின்னர் அமேசான் தரப்பில் சில மாற்றங்கள் செய்யச் சொன்னதால், வர்ஷா மறுத்துவிட்டதாகவும், அதன் பின்னர்தான் தானே தயாரிக்க ஒப்புக்கொண்டதாகவும் வெற்றி மாறன் கூறினார்.