ARTICLE AD BOX
தவெக-வின் நான்காம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட விஜய் இன்று பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். கோஷ்டி பூசல், மெட்ராஸ் பட பாணியிலான சுவர் அரசியல் என தகதகத்த தவெக முகாமின் இன்றைய மீட்டிங்கின் அப்டேட்ஸ் இங்கே.
எப்போதும் மதியம் 12:30 மணியிலிருந்து மதியம் 1:30 க்குள் அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த விஜய், இன்றைக்கு 3 மணிக்குத்தான் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். காலை முழுவதும் மத்திய பட்ஜெட் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அந்த நேரத்தில் அலுவலகத்துக்கு வருகை தருவதை விஜய் தவிர்த்திருக்கிறார். ஊடகங்களின் கவனம் முழுவதும் பட்ஜெட்டில் இருக்கும் என்பதால் விஜய்யின் வருகையை கிட்டத்தட்ட மாலைக்கு நெருக்கமாக தள்ளிவைத்திருந்தது அவரது டீம்.
பட்ஜெட் வெளியானவுடன் பட்ஜெட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்பதால், பொலிட்டிக்கல் அட்வைஸ் டீம் அதற்காக வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்துதான் 'மீண்டும் புறக்கணிக்கப்படுகிறது தமிழகம்' என விஜய் தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் பதவி வழங்குவதில் தாங்கள் சாதிரீதியாக புறக்கணிப்படுகிறோம் என ஊடகங்களிடம் குமுறிக் கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மேற்கில் G.K.கதிர் என்பவருக்கு மா.செ பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு தரப்பு அதில் அதிருப்தியடைந்திருக்கிறது. நீண்ட நாட்களாக பணி செய்த சரண் என்பவருக்கு அந்த தரப்பு மா.செ பதவியை எதிர்பார்த்திருக்கிறது. ஆனால், அவருக்கு பொருளாளர் பதவியே வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் சரணின் ஆதரவாளர்களும் புறக்கணிப்பட்டதாக புகார் சொல்கின்றனர். அலுவலகத்துக்குள் இவர்கள் பஞ்சாயத்தை கூட்ட... உஷாரான ஆனந்த் அவர்களை அலுவலகத்துக்குள் அழைத்துப் பேசினார்.
'7 வருசமா எங்கேயோ காணாம போயிட்டு கட்சி ஆரம்பிச்ச உடனே பதவி கேட்கிறாங்க.' என இந்த பஞ்சாயத்தில் தன் தரப்பு விளக்கத்தை ஊடகங்களுக்கு சொன்னார் ஆனந்த்.
பதவிகளுக்கு உள்ளடி வேலைகள் நடந்துகொண்டிருக்க, பதவியை பெற்றவர்கள் கட்சி அலுவலகத்தில் போஸ்டர் ஒட்டுவதில் மோதிக்கொண்டிருக்கின்றனர். பனையூர் அலுவலகத்தின் கேட்டின் இருபக்கத்திலும் சென்னையை சேர்ந்த மா.செக்கள் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள்.
இதில், தென் சென்னை, சென்னை புறநகர் மா.செக்கள் ஒரு கேங். மத்திய சென்னை மா.செ ஒரு கேங். கேட்டுக்கு அருகே ஒட்டப்பட்டிருந்த தென் சென்னைக்காரரின் போஸ்டர் மேல் மத்திய மாவட்டத்தினர் போஸ்டர் ஒட்டிவிட்டதால் இருதரப்பும் முகத்தைத் திருப்பிக் கொண்டு சுற்றிக்கொண்டிருக்கின்றனர். பனையூரில் ஒரு 'மெட்ராஸ்' பட அரசியல்!
விஜய்யை சந்திக்க ஜப்பானை சேர்ந்த மூன்று ரசிகர்கள் வந்திருந்தனர். 'மெர்சல்' படத்திலிருந்து விஜய்யின் தீவிர ரசிகர்களாகிவிட்டோம் எனக் கூறிய அவர்களை அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று விஜய்யுடன் புகைப்படம் எடுக்க வைத்தார் ஆனந்த்.
விஜய்யும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எனக்கூறி அனுப்பியிருக்கிறார். வெளியே இருந்து இதையெல்லாம் கவனித்த தொண்டர்கள் 'ஜப்பான்லயும் நம்ம ஆட்சிதான் தலைவா..' என ஜாலியாக ஆர்ப்பரித்தனர்.
நாளை தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நடக்கவிருக்கிறது. இதில், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட கட்சியின் கொள்கைத் தலைவர்களின் சிலையை விஜய் திறக்கவிருக்கிறார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என பொறிக்கப்பட்ட ஆர்ச்சுக்குள் வாகை மலர் பின்னணியில் ஐந்து கொள்கைத் தலைவர்களின் மார்பளவு சிலை தயார் செய்யப்பட்டிருக்கிறது.
TVK Vijay: "மத்திய பட்ஜெட்டில் மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்; ஏழை மக்களுக்கு அநீதி" - விஜய்