ARTICLE AD BOX
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி ஓர் ஆண்டு முடிவடைகிறது. இரண்டாம் ஆண்டின் தொடக்கவிழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று காலைமுதல் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வில் இந்தக் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருந்தார்,

`1967, 1977 சட்டமன்ற தேர்தல் போல இருக்கும்’
அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ``தமிழக அரசியலில் முதன்மை அரசியல் சக்தியாக நாம் உருவெடுத்து வருகிறோம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல், 1967, 1977 சட்டமன்ற தேர்தல் போல இருக்கும். நம் சித்தாந்தத்திலிருந்து எத்தகைய விலைக்கும் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். இந்த அரசியலில் யார் யாரை எதிர்ப்பார்கள் என்று நமக்கு தெரியாது. யார் யாரை ஆதரிப்பார்கள் என்றும் தெரியாது.
`மக்களுக்கு பிடித்த ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால்...’
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். ஆனால், மக்களுக்கு மிகவும் பிடித்த ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால், அதை நல்லவர்கள் வரவேற்பார்கள். ஆனால், ஒரு சில அதிகார... ஒரு சிலருக்கு எரிச்சல் வரத்தான் செய்யும். இதுவரைக்கும் நாம் சொல்லிக் கொண்டிருந்த பொய்களை நம்பி மக்கள் ஓட்டு போட்டுக் கொண்டிருந்தார்களே, ஆனால் இப்போது இவன் சொல்வதெல்லாம் மக்கள் மனதிற்கு நெருக்கமாகவே இருக்கிறதே, அதுவே நமக்கு பெரிய நெருக்கடியாக இருக்கிறதே, இவனை எப்படி முடித்து விடலாம் என்று குழப்பம் வரும்.

அந்தக் குழப்பத்தில் கத்துவதா கதறுவதா என்று தெரியாமல் வர்றவன் போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என்று சொல்லி ஏதாவது பேச ஆரம்பிப்பார்கள். இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராக பேசுவது மாதிரி... இதையெல்லாம் கடந்து நம் கட்சி இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஒரு கட்சியின் பலமே அதன் அடிப்படை கட்டமைப்புதான். அதைப் பலப்படுத்தும் வேலையை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
`நம்ம மேல புகார்...’இந்த நேரத்துல நம்ம மேல ஒரு புகார்... அதாவது நம்முடைய மாவட்ட நிர்வாகிகள் எல்லோரும் இளைஞர்களாக இருக்கிறார்களாம். அப்படி இருந்தால்தான் என்ன... அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்தபோதும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோதும் அவர்கள் பின்னாடி நின்றது வெறும் இளைஞர்கள்தான். இளைஞர்களால்தான் 1967-ல், 1977-ல் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு.

அதேமாதிரி நம் மீது இன்னொரு புகாரும் வந்திருக்கிறது. கட்சி நிர்வாகிகள் எல்லோரும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்களாம். ஏன் வரக்கூடாதா... சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான் பெரிதாக சாதித்திருக்கிறார்கள். நம்முடைய கட்சி எளிய மக்களுக்கான கட்சி. அப்படி இருக்கும்போது நம் கட்சி நிர்வாகிகள் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். நம்முடைய கட்சி பண்ணையார்களுக்கான கட்சி ஒன்றும் கிடையாது. அந்த காலத்தில் எல்லாம் பண்ணையார்கள்தான் தான் பதவியில் இருப்பார்கள். இப்போது அது மாறி, பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்களாக மாறிவிட்டார்கள்." என்று கூறினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
