ARTICLE AD BOX
அமெரிக்காவில் குடியுரிமைக் கட்சி வெற்றி பெற்று அதிகார மாற்றம் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பயனர்கள் வித்தியாசமான ஒன்றை எதிர்கொண்டுள்ளனர்.
பலரும் தங்கள் கணக்கு தானாகவே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸை பின்தொடர்வதை கவனித்து, இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
பலரும் இது ஏதாவது கோளாறாக இருக்கும் என நினைத்தனர். ஆனால், இது திட்டமிட்டு செய்யப்பட்டதுதான் என விளக்கியுள்ளார் மெட்டா நிறுவன செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன்.
ஃபாலோவர்கள் மாற்றம்
அதிகாரபூர்வமான POTUS கணக்குகள் வெள்ளை மாளிகை கணக்கு என வெள்ளை மாளிகையால் நிர்வகிக்கப்படும் கணக்குகள் அதிகார மாற்றத்தின்போது அப்டேட் செய்யப்படும்.
பழைய POTUS கணக்கு அர்சீவ் செய்யப்பட்டு, புதிய கணக்கு தொடங்கப்படும். அப்போது, பழைய அதிகாரபூர்வ கணக்குகளின் ஃபாலோவர்கள் புதிய கணக்குக்கு மாற்றப்படுவார்கள்.
ஜோ பைடன் காலத்தில் அதிபரின் Facebook POTUS கணக்கு 11 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தது. இப்போது அந்த கணக்கு அர்சீவ் செய்யப்பட்டு (பாதுகாக்கப்பட்டு) அதில் இருந்த ஃபாலோவர்கள் ட்ரம்ப்பின் POTUS கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக இது நடைபெறுவதனால் பயனர்கள் குழம்பியிருக்கின்றனர். இப்படி மாற்றப்படுவதில் விருப்பம் இல்லாதவர்கள் எளிதாக அன்ஃபாலோ செய்துகொள்ளலாம் என ஆண்டி தெரிவித்துள்ளார்.
Instagram -ல் அரசியல் சார்பு?
இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் "#Democrat" அல்லது "#Democrats" என்ற ஹேஷ்டேகை தேடும்போது "முடிவுகள் மறைக்கப்பட்டுள்ளன" என வருவதாக புகார் எழுந்தது. இதனால் மெட்டா நிறுவனம் அரசியல் சார்புடன் செயல்படுவதாகக் கூறப்பட்டது.
ஆனால் மெட்டா நிறுவனமோ பல ஹேஷ்டேக்குகளுக்கு இந்த பிரச்னை உள்ளதாகவும்... குடியரசு கட்சி சார்பான ஹேஷ்டேகுகளுக்கும் கூட இப்படி வருவதாகவும் கூறியுள்ளது.
அதிபருடன் நெருக்கம்...
புதிய அதிபர் ட்ரம்ப்பின் பதவியேற்பில் மார்க் சக்கர்பெர்க் கலந்துகொண்டதனால் இது போன்ற குற்றச்சாட்டுகள் வலுபெற்று வருகின்றன.
சமீபத்தில் மார்க் சக்கர்பெர்க் மெட்டாவில் உண்மை சரிபார்த்தலை ரத்து செய்ய உள்ளதாகவும், இப்போது இருக்கும் அதிகபட்சமான தணிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் பேசியிருந்தார். "இது நம் வேர்களுக்கு திரும்பவதற்கான நேரம், சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறினார் மார்க்.
அமெரிக்காவின் பன்முகத்தன்மைக்கு முடிவுகட்டும் ட்ரம்ப்பின் திட்டத்துடன் ஒத்துபோகும் வகையில் மெட்டாவின் பன்முகத்தன்மை முயற்சிகளைக் கைவிட மார்க் முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் மெட்டாவில் உயர்பதவிக்கு குடியரசு கட்சியுடன் தொடர்புடைய ஜோயல் கப்லன் என்பவரை பணியமர்த்தியதும் சர்ச்சையை உருவாக்கியது.
உண்மைத் தன்மை இல்லாத, பன்முகத்தன்மை, சமபங்கு பேணாத பேஸ்புக்கை நாம் காண இருக்கிறோம். அதிபருடனான நெருக்கமும் வலதுசாரி ஆதரவும் மார்க் சக்கர்பெர்க்குக்கு எந்த வகையில் உதவப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.
Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு... முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்