அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடா மீது வரிகளை சுமத்தியது தெரிந்த விஷயம்தான். அதற்காக, கனடாவும் பதில் வரிகளை போட்டு தாக்கியது. இதனால், இரு நாடுகளிடையே வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது. தற்போது, கனடாவில் புதிய பிரதமர் பதவியேற்றுள்ள நிலையில், கனடாவை ட்ரம்ப் வசைபாடியுள்ளார்.

அமெரிக்கா-கனடா இடையே வரிப் போர்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின், கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்தார். அதற்கு, அந்தந்த நாடுகளும் பதிலடி கொடுத்தன. கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அதிரடியாக 25 சதவித வரியை விதித்தார் ட்ரம்ப்.

இதற்கு பதிலடியாக, கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு 2 கட்டமாக வரி விதிப்பை அறிவித்தது. அது குறித்து பேசிய அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவின் நியாயமற்ற முடிவுக்கு கனடா பதிலளிக்காமல் விடாது என்று கூறியதோடு, அமெரிக்க அரசின் வரிவிதிப்பு அமலுக்கு வரும் அதே நேரத்தில், கனடா, அமெரிக்கா மீது விதிக்கும் 25 சதவீத வரியும் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

மொத்தமாக, அமெரிக்காவின் 155 பில்லியன் டாலர்கள் அளவிற்கான பொருட்கள் மீது வரி விதிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாக வரி விதிப்பு அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார். மீதமுள்ள 125 பில்லியன் டாலர்கள் அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பு, 21 நாட்களுக்குப்பின் அமல்படுத்தப்படும் என அறிவித்தார் ட்ரூடோ. அமெரிக்க வரி விதிப்பு அமலில் இருக்கும் வரை, தங்களது வரி விதிப்பும் அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அதன்படி, இருநாட்டு வரிகளும் அமலில் உள்ளன. இந்நிலையில், கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்நே கடந்த வாரம் பதவியேற்றார்.

பேட்டி ஒன்றில் கனடாவை வசைபாடிய ட்ரம்ப்

இந்நிலையில், பிரபல அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப், கையாளுவதற்கு மோசமான நாடு கனடா என விமர்சித்துள்ளார். இதேபோல், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் விமர்சித்துள்ளார். அவரும், அவரது மக்களும் மிகவும் மோசமானவர்கள் என்று கூறிய ட்ரம்ப், அவர்கள் உண்மையை சொல்லவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கனடாவில் அக்டோபர் மாதத்திற்குள் கூட்டாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியைவிட, லிபரல்களுடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருக்கும் என ட்ரம்ப் கூறியுள்ளார். அவர்களை கையாள்வது எளிதாக இருக்கும் என்றும், அவர்தான் வெற்றி பெறுவார்கள் என்று நினைப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை என்றும், அது தனக்கு ஒரு பெரிய விஷயமல்ல என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.

அதோடு, முட்டாள்தனமாக இயங்கிக்கொண்டிருக்கும் கன்சர்வேடிவ் கட்சி, அதன் தலைவர், அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பொய்லிவ்ரே தனது நண்பர் இல்லை என்றும், அவர் எதிர்மறையான விஷயங்களை சொன்னதாகவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.