Tretinoin: டிரெண்டிங்கில் இருக்கும் ட்ரெடினோயின் கிரீம்; மருத்துவர் எச்சரிப்பது என்ன?

10 hours ago
ARTICLE AD BOX

சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ட்ரெடினோயின் க்ரீம், எப்படிச் சாதாரண மக்கள் மத்தியிலும் இன்ஃப்ளூயன்சர், சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பரிச்சயமானது. எதற்காக இவ்வளவு ஹைப் கொடுக்கிறார்கள், இந்த க்ரீம் அப்படி என்ன செய்கிறது, ட்ரெடினோயின் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

ட்ரெடினோயின் என்றால் என்ன?

ட்ரெடினோயின் என்பது ஒரு வகை ரெட்டினாய்டு ஆகும். பலரும் இதனை ஸ்டீராய்டு என்று கூறுகின்றனர். ஆனால் இது வைட்டமின் ஏ அடிப்படையிலான தயாரிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

டிரெடினோயின் ஸ்டீராய்டு இல்லை

ஸ்டீராய்டு கிரீம்கள் சருமத்திற்கு ஏற்றவை இல்லை. இவற்றை நீண்ட காலம் பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஸ்டீராய்டு கிரீம்களின் வகை, அளவு, சிகிச்சை காலம், வயது ஆகியவற்றைப் பொறுத்து பக்க விளைவுகளின் அபாயம் மாறுபடும். தோல் அரிப்பு, சிவத்தல், வீக்கம், தொண்டைப் புண், கரகரப்பான குரல். ஏன்.. தோல் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் கூட ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் டிரெடினோயின் ஸ்டீராய்டு இல்லை.

தோல் வறட்சி, வெடிப்பு

அமெரிக்கத் தோல் மருத்துவ அகாடமி சொல்வதென்ன?

இது முகப்பருவுக்குச் சிகிச்சையளிக்கவும், சருமத்தின் தோல் மற்றும் அமைப்பை மேம்படுத்தவும், சுருக்கங்களைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்று அமெரிக்கத் தோல் மருத்துவ அகாடமி (ஏஏடி) தெரிவித்துள்ளது.

1971 ஆம் ஆண்டில், முகப்பருவிற்கான மேற்பூச்சு சிகிச்சைக்காக (topical treatment ) அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (எஃப்டிஏ) அங்கீகரிக்கப்பட்ட முதல் ரெட்டினாய்டு 'டிரெடினோயின்' ஆனது என்று ஏஏடி தெரிவித்துள்ளது.

டிரெட்டினோயின் யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

மார்கெட்களில் பல ரெட்டினாய்டுகள் உள்ளன. ஆனால் இந்த ட்ரெடினோயின் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், இது எல்லோரும் பயன்படுத்தப் பரிந்துரைக்க மாட்டோம் என்றும் கூறுகிறார் தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா ராகுல்.

"டிரெட்டினோயின் பல தசாப்தங்களாகத் தோல் மருத்துவச் சிகிச்சையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. மேலும் இது பல ஆண்டுகளாக நாங்கள் பரிந்துரைத்து வருகிறோம்," என்று மருத்துவர் கோல்டா கூறுகிறார்.

ஆக்னி இருப்பவர்களுக்கும், ஆயிலி ஸ்கின் இருப்பவர்களுக்கும் இந்த டிரெட்டினோயின் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம். காரணம் சருமத்தின் எண்ணெய்ப் பசை தன்மையை இந்த மூலக்கூறு குறைக்கிறது.

தோலில் சுருக்கம் இருப்பவர்களுக்கும் இதனைப் பரிந்துரைக்கிறோம். 30 வயதிற்குப் பிறகு ஆன்ட்டி ஏஜிங் கிரீமாக ரெட்டினால், டிரெட்டினோயின் பயன்படுத்த வலியுறுத்துகிறோம். ஆனால் 25 வயதிலேயே ஒருவருக்கு வயசான தோற்றம் ஏற்படுமானால் இந்த மூலக்கூற்றைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றோம்.

டாக்டர் கோல்டா ராகுல்
Skin Health: மரு... அழகுப் பிரச்னையா? ஆரோக்கியப் பிரச்னையா?

மேலும் இது சருமத்தின் ஆழமான அடுக்குகளில் கொலாஜனை உருவாக்க உதவுகிறது. கொலாஜனை உருவாக்குவதன் மூலம் முகப்பரு வடுக்கள் மற்றும் சுருக்கங்களுக்குச் சிகிச்சையளிக்க ட்ரெடினோயின் உதவுகிறது.

அதிகமாக வெயிலில் செல்பவர்கள், மென்மையான தோல் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்தக்கூடாது. இதனைப் பயன்படுத்திவிட்டு வெயிலில் செல்பவர்களுக்கு அதிகமான கருமையை ஏற்படுத்தும்.

இந்த ட்ரெடினோயின் பயன்படுத்தும் சிலருக்குச் சருமம் எரிச்சல் ஏற்படும். அப்போது அதன் மீது கேரட் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தேய்க்கும் போது முகம் முன்பு இருந்ததை விட மேலும் கருமையாக மாறக்கூடும் என்கிறார் மருத்துவர் கோல்டா.

டிரெட்டினோயின் ஜெல், கிரீம் மற்றும் லோஷன் வடிவங்களில் கிடைக்கிறது. அதிலும் வெவ்வேறு சதவீதங்களில் வழங்கப்படுகிறது. இது பல்வேறு வகையான தீர்வையும், விளைவையும் கொடுக்கிறது என்கிறார்.

ட்ரெடினோயினின் நன்மைகள்

  • முகப்பருக்குச் சிகிச்சை,

  • மேம்படுத்தப்பட்ட ஹைப்பர் பிக்மென்டேஷன்,

  • போட்டோடேமேஜ் (இளம் வயதிலேயே வயசான தோற்றம்),

  • சுருக்கங்கள் உட்பட வயதான அறிகுறிகள் குறைதல்.

டாக்டர் கோல்டா கூற்றுப்படி, ட்ரெடினோயின் என்பது முகப்பரு மற்றும் வெயிலால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல பொதுவான தோல் பிரச்னைகளை நிவர்த்தி செய்யப் பயன்படும் மிகவும் பயனுள்ள மருந்து ஆகும்.

ட்ரெடினோயின் தோல் செல்களின் உற்பத்தியை விரைவுபடுத்துவதால், உடலில் கொலாஜனின் தொகுப்பை இது தூண்டுகிறது.

ட்ரெடினோயின் முகப்பரு சிகிச்சையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தாலும் ஆன்ட்டி ஏஜிங்கிலும் சிறப்புப் பங்கு வகிக்கிறது.

முகப்பருவை விரட்டுவதோடு மட்டுமல்லாமல், வைட்டமின் ஏ சேதமடைந்த சருமத்தை உரிக்கவும் அனுமதிக்கிறது. இதனால் சருமத்தின் பழைய தோல் உரிந்து முகம் பொழிவு பெறுகிறது.

ட்ரெடினோயின் பக்க விளைவுகள்

மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த ட்ரெடினோயின் பயன்படுத்தக்கூடாது என்கிறார் மருத்துவர் கோல்டா.

இதனைப் பயன்படுத்திய முதல் வாரங்களில் சருமத்தில் வறட்சி, சிவத்தல் மற்றும் தோல் எரிச்சல் போன்றவை ஏற்படும் என்கிறார் டாக்டர் கோல்டா.

சரியான முறையில் குறைந்த அளவில் பயன்படுத்துவதால் மட்டுமே ஆரோக்கியமான ஸ்கின் பெற முடியும், தங்களின் தோல் பிரச்னைகளையும் சரிசெய்ய முடியும் என்கிறார் மருத்துவர்.

"ஒவ்வொரு நபரின் சருமமும் வேறுபட்டது, ட்ரெடினோயினை பொறுத்துக்கொள்ளும் திறன் மாறுபடும். பக்க விளைவுகளைக் குறைக்க, முதல் இரண்டு வாரங்களுக்கு (உங்கள் மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும்) ஒவ்வொரு இரவும் அல்லது ஒவ்வொரு இரண்டு இரவும் மட்டுமே ட்ரெடினோயினை பயன்படுத்தலாம்" என்கிறார்.

சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால், தோல் எரிச்சல் ஏற்படும். இதனால் ஹைப்பர் பிக்மென்டேஷன் கூட ஏற்படும். எரிச்சலால் உருவாகும் சருமத்தின் திட்டுகள் கருமையாக மாறக் கூடும்.

ஹைப்பர் பிக்மென்டேஷனைத் தவிர்க்க, ட்ரெடினோயின் சிகிச்சையை மெதுவாகத் தொடங்குங்கள். அதை மாய்ஸ்சரைசருடன் பயன்படுத்தவும். அதிகமான அல்லது குணமடையாத தோல் எரிச்சல் என்றால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார்.

கர்ப்ப காலத்தில் ட்ரெடினோயின் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

ட்ரெடினோயின் போன்ற கிரீம் வடிவ ரெட்டினாய்டுகள், ஐசோட்ரெடினோயின் போன்ற வாய்வழி (oral) ரெட்டினாய்டைப் போல உடலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அதனைக் கர்ப்பமாக இருக்கும் அல்லது பாலூட்டும் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் கோல்டா.

கர்ப்ப காலத்தில் ட்ரெடினோயின் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த எந்த ஆய்வும் இல்லை. எனவே, நீங்கள் கருத்தரிக்க முயல்கிறீர்கள் என்றாலும் சரி, கர்ப்ப காலத்திலும் சரி, ட்ரெடினோயின் போன்ற ரெட்டினோயிக் அமிலங்களைப் பயன்படுத்துவதை மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என்று கோல்டா கூறுகிறார்.

"இதுபோன்ற ரெட்டினாய்டுகள் கர்ப்ப காலத்தில் மாத்திரையாகவோ, மருத்தாகவோ வாய்வழியே எடுத்துக்கொள்ளும் போது அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும். உதடுகளில் ஓட்டை அல்லது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும்" என்கிறார்.

Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..!
pregnancy

எப்போது, எப்படி Tretinoin பயன்படுத்த வேண்டும்?

அதிக சக்தி வாய்ந்த மூலக்கூறு என்பதால் சருமத்திற்குப் படிப்படியாகப் பயன்படுத்துவது நல்லது.

வாரத்திற்கு மூன்று முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தலாம். முதலில் பத்து நிமிடம். அதன் பின்னர் 30 நிமிடம் என நேரத்தை உங்கள் சருமத்திற்கு ஏற்ப செட் செய்து கொள்ளலாம். தினசரி இவற்றைப் பயன்படுத்தினால் சருமம் அதிக வறட்சியாகும். குறிப்பாக, சருமத்திற்குச் சரியான சன்ஸ்க்ரீன், மாய்ஸ்ரைசர் பயன்படுத்த வேண்டும்.

காலையில் அதனைப் பயன்படுத்து வேண்டாம் என்று கூறுகின்றனர். காரணம் இது சூரிய ஒளிக்கு அதிக உணர்த்திறன் கொண்டதாக மாறக்கூடும். அதன் செயல் திறனும் குறைவாக இருக்கக்கூடும். எனவே பகலில் அல்லாமல் இரவில் Tretinoin பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

AHA - ட்ரெடினோயின்

உங்களுக்கு ட்ரெடினோயின் பரிந்துரைக்கப்பட்டிருந்தால், மற்ற சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதாவது அஸ்ட்ரிஜென்ட்கள் அல்லது ஆஃப்டர் ஷேவ் லோஷன்கள் போன்றவை எரிச்சலை ஏற்படுத்தும்.

மேலும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய AHAகள் அல்லது லாக்டிக் போன்ற தயாரிப்புகளை ட்ரெடினோயின் உடன் சேர்த்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் கோல்டா.

மேயோ கிளினிக்கின் படி, பென்சாயில் பெராக்சைடு (சில சந்தர்ப்பங்களில் பென்சாயில் பெராக்சைடு கொண்ட ட்ரெடினோயின் தயாரிப்பைப் பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைக்கலாம்), சாலிசிலிக் அமிலம் மற்றும் சல்பர் போன்ற உரித்தல் தன்மை கொண்ட தயாரிப்புகளைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எப்படி சோசியல் மீடியாவில் பிரபலமானது?

மருத்துவர் கோல்டா ராகுல் கூற்றுப்படி, இந்த ட்ரெடினோயின் தயாரிப்புகள் சோசியல் மீடியாவில் பிரபலமானதற்குக் காரணமே எளிதில் கிடைப்பதால் தான்.

இந்த கிரீம் எளிதில் எல்லாராலும் வாங்கி பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாமல் இதன் விலையும் குறைவு என்பதாலும் பயனர்கள் இதனை நாடுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இதனைப் பயன்படுத்தும் போது விரைவாகவே அவர்களது சருமத்தில் மாற்றங்கள் ஏற்படும். இரண்டு முதல் நான்கு வாரங்களிலேயே மாற்றங்கள் ஏற்படும் என்பதாலும் இதனைப் பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். சோசியல் மீடியாவில் சொல்கிறார்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்று வெறுமன ஒரு கிரீமை பயன்படுத்தாமல் உங்கள் ஸ்கின் குறித்து மருத்துவரிடம் அணுகி முறையான மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் கோல்டா.

இளைய தலைமுறையினரிடம் ஸ்கின் கேர் குறித்த பயன்பாடும் அதிகம் உள்ளது. தங்களது சருமத்தைப் பளபளவென்று வைத்திருக்கப் பல விஷயங்களைச் செய்கின்றனர். ஆனால் இந்த ஸ்கின் கேரின்போது விழிப்புணர்வும் தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.

ஏதோ ஒரு கிரீமை சருமத்திற்குப் பயன்படுத்தி பலன் கிடைப்பதற்குப் பதிலாகச் சரியான ஆரோக்கியமான முறையில் தங்களது சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Ice Cube For Face: ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறுமா? அழகியல் மருத்துவர் சொல்வெதன்ன?

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article