Tn Factcheck: எதற்காக மீண்டும் மீண்டும் பொய்யை சொல்லி சமாளிக்க வேண்டும்…? அண்ணாமலை கேள்வி…

4 hours ago
ARTICLE AD BOX

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2,497 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டதாகவும், இந்த ஆண்டு ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில், மானியக் கோரிக்கையில் அன்பழகனார் என்ற பெயரே இல்லை” என்று அண்ணாமலை கூறிய கருத்திற்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு மறுப்பு தெரிவித்திருந்தது.

அதற்கு தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; திமுக அரசை, அமைச்சர்களை நோக்கி, தமிழக பாஜக கேள்வி எழுப்பும்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஓடி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு ஊழியர். ஒவ்வொரு முறையும் அவருக்கும் சேர்த்து விளக்கமளிப்பதும், அவர் பின்னால், திமுக அரசும், அமைச்சர்களும் மறைந்து கொள்வதும் வாடிக்கையாகியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இருப்பதும், பல பள்ளிகளில், மேற்கூரைகள் இடிந்து விழுவதும், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடப்பதும் நாள்தோறும் செய்திகளாக வெளிவருகின்றன. நிலைமை இப்படி இருக்க, பல ஆயிரம் கோடி செலவில் பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளோம் என்று அமைச்சர்கள் சட்டசபையிலேயே கூறுகிறார்கள். அப்படி எங்குதான் பள்ளிகள் கட்டியுள்ளீர்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கேட்டோம். இம்முறையும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு ஊழியர் ஓடி வந்திருக்கிறார்.

2025 – 26 ஆண்டுக்கான மானியக் கோரிக்கை இன்னும் தொடங்கப்படவே இல்லை என்றால், இந்த financedept.tn.gov.in/en/my-document… இணைப்பில் இருப்பது என்ன? அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களுக்கும், அவற்றின் பெயரைக் குறிப்பிட்டு, மானியக் கோரிக்கை அட்டவணையில் நிதி ஒதுக்கீடு இடம்பெறுவது வழக்கம். 2022 – 23, 2023 – 24 ஆண்டுகளில் ரூ. 1,887.75 கோடி செலவு செய்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 2023 – 24 ஆண்டில், மூலதன உட்கட்டமைப்புக்குச் செலவிடப்பட்ட நிதி ரூ.352 கோடி மட்டுமே. எந்தத் திட்டத்தின் கீழ், ரூ. 1,887.75 கோடி செலவிடப்பட்டது?நபார்டு வங்கியிடமிருந்து பெற்ற, ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதி மூலம் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவே தவிர, நீங்கள் கூறும் செலவினங்கள், மானியக் கோரிக்கையுடன் சற்றும் ஒத்துப் போகவில்லையே ஏன்?

கடந்த 2023 – 24 ஆம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்ததும், அதில் ஒரு ரூபாய் கூட செலவிடப்படாததும், திமுக அரசு வெளியிட்ட மானியக் கோரிக்கையிலேயே இருக்கிறது. ஆனால் நீங்கள் செலவு செய்ததாகக் கூறும் ரூ. 429.67 கோடி, எந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு வைக்கப்பட்டுள்ளது..? உங்களிடம் நிதி ஒதுக்கீடு, செலவீனங்கள் குறித்த சரியான தரவுகள் இருந்தால், எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் எதற்கு இத்தனை தயக்கம்? எதற்காக மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும்? என தெரிவித்துள்ளார்.

The post Tn Factcheck: எதற்காக மீண்டும் மீண்டும் பொய்யை சொல்லி சமாளிக்க வேண்டும்…? அண்ணாமலை கேள்வி… appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article