ARTICLE AD BOX
டீ கடைக்கு செல்லாவிட்டால் பலருக்கும் நாளே ஓடாது. நமக்கும் டீ கடைகாரருக்கும் எப்போதும் ஒரு நெருக்கம் இருக்கும். ஆனால் டீ கடைக் காரரே இல்லாத ஒரு கடையை பற்றி அறிவீர்களா?
பல ஹோட்டல்களிலும் பஃபே முறையில் உணவை வைத்து நாமே சென்று எடுத்துக்கொள்ளும் செல்ஃப்-சர்வீஸ் உண்டு. அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் இந்த கடையில் வாடிக்கையாளர்களே தங்களுக்கான டீயைப் போட்டுக்கொள்ள வேண்டும். உரிமையாளர் கடையில் இருந்தாலும் அப்படியே!
உரிமையாளர் கடையில் இல்லை என்றாலும் தங்களது டீக்கான விலையை அங்குள்ள கள்ளா பெட்டியில் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். இதுவரையில் அங்கு யாரும் பணம் கொடுக்காமல் சென்றதில்லை என்கின்றனர். இப்படி ஒரு டீக்கடை எங்கிருக்கிறது என்று தானே கேள்வி எழுகிறது...

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள செரம்போரே என்ற ஊரில்தான் இந்த டீக்கடை அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக இப்படித்தான் இயங்கி வருகிறது என்கின்றனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஆராதனா சட்டர்ஜி என்ற டிஜிட்டல் கிரியேட்டர், இந்த Tea Shop பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ப்ரூக் பாண்ட் என்ற தேயிலை கம்பனியில் பணியாற்றிவந்த நரேஷ் சந்திரா ஷோம் என்ற நபரால் இந்த டீக்கடை தொடங்கப்பட்டது என வீடியோவின் தலைப்பில் எழுதியுள்ளார். நரேஷ் சந்திரா ஷோம் சுதந்திர போராட்டத்தில் கூட ஈடுபட்டிருந்தாராம்.
அதன் தற்போதைய உரிமையாளர் தினமும் கடையை திறந்து சில அடிப்படை வேலைகளை மட்டும் செய்கிறாராம். இப்போதுவரை இங்கு திருட்டோ, பணம் செலுத்தாமல் நடந்த சம்பவங்களோ நடந்ததில்லை என அவர் கூறுகிறார்.

இந்த கடை விலைமதிப்பில்லாத நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவதாக வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோவில் நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ச்சியான கமண்ட்களை தெரிவித்துள்ளனர்.
வீடியோவில் ஆராதனா சட்டர்ஜி கூறுவதைப் போலவே, "உங்களுக்கு உலகில் மனிதர்களுக்கிடையே மங்கிவிட்டதாகத் தோன்றும்போது இதை இந்த சிறிய டீக்கடை 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுவதை நினைத்துக்கொள்ளுங்கள்."