ARTICLE AD BOX
மார்ச் 17, 2025க்கு முன், இதே மார்ச் 17ஆம் தேதி விஜயகாந்தின் பாட்டுக்கு ஒரு தலைவன், கார்த்திக் நடித்த உன்னை சொல்லி குற்றமில்லை, அர்ஜுன் நடித்த மனைவி ஒரு மாணிக்கம் போன்ற ரசிகர்களை கவர்ந்த படங்கள் வெளியாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளில் மார்ச் 17இல் வெளியாகியுள்ள இந்த படங்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு
பாட்டுக்கு ஒரு தலைவன்
லியாகத் அலிகான் இயக்கத்தில் விஜயகாந்த் - ஷோபனா நடித்து 1989இல் வெளியான ரெமாண்டிக் படம் பாட்டுக்கு ஒரு தலைவன். படத்தின் எம்.என். நம்பியார், கே.ஆர். விஜயா, விஜயகுமார், லிவிங்ஸ்டன், எஸ்.எஸ். சந்திரன், ஜனகராஜ், செந்தில் ,கோவை சரளா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தின் விஜயகாந்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இளையராஜா இசையில் நினைத்தது யாரோ என்ற பாடல் சிறந்த மெலடி பாடலாக மாறியது.
மனைவி ஒரு மாணிக்கம்
சோழராஜன் இயக்கத்தில் அர்ஜுன், ராதா, சாதனா உள்பட பலர் நடித்து திகல் கலந்த த்ரில்லர் படமாக 1990இல் வெளியானது மனைவி ஒரு மாணிக்கம். இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் முகேஷ் தமிழில் அறிமுகமானார். பாம்பாக மாறி பழிவாங்கும் கதையாக அமைந்திருக்கும் இந்த படத்தின் திகிலான திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சங்கர் - கணேஷ் இசையமைப்பில் ராசாத்தி நாகவள்ளி என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது.
உன்னை சொல்லி குற்றமில்லை
அமீர்ஜான் இயக்கத்தில் கார்த்திக் - சித்தாரா நடிப்பில் 1990இல் வெளியான படம் உன்னை சொல்லி குற்றமில்லை. காதலும், காமெடியும் கலந்த பாணியில் உருவாகியிருந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார். இளையராஜா இசையில் யேசுதாஸ் குரலில் சொர்ககத்தின் வாசப்படி என்ற அற்புதமான மெலடி பாடல் இடம்பிடித்திருப்பது இந்த படத்தில் தான். கிரேஸி மோகனின் காமெடி வசனமும், கார்த்திக்கின் துறுதுறு நடிப்பும் படத்தை ரசிக்க வைக்கும் விதமாக அமைந்திருந்தது.
பட்டியல்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, பரத், பத்மபிரியா, பூஜா உமாசங்கர், கொச்சின் ஹனிபா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க 2006இல் வெளியான க்ரைம் த்ரில்லர் படம் பட்டியல். 1999இல் வெளியான தாய்லாந்து மொழி படமான பேங்காக் டேஞ்சரஸ் படத்தின் அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரம் நிஜ நபர் ஒருவரை மையப்படுத்திய உருவாக்கப்பட்டது. பரத் வாய் பேச முடியாதவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானதுடன், ரிப்பீட் மோடில் கேட்கப்படும் பாடலாக அமைந்தது. இந்த படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் தமிழ்நாடு அரசின் விருது கிடைத்தது. படம் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் படமாகவும் மாறியது.
கட்டப்பாவ காணோம்
மணி செய்யோன் இயக்கத்தில் சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு நடித்து 2017இல் வெளியான காமெடி படம் கட்டப்பாவ காணோம். கட்டப்பா என்ற பெயரில் இருந்து வரும் அதிர்ஷ்ட மீன் காணாமல் போக, அதை கண்டுபிடிக்க நடக்க கலாட்டாக்களே படத்தின் கதையாகும். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் சராசரி வசூலை பெற்ற படமாக உள்ளது.
