ARTICLE AD BOX
மார்ச் 18, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் நடித்த நீதிக்கு தலைவணங்கு, சிவாஜி கணேசன் நடித்த என்னைப்போல் ஒருவன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் தமிழ் சினிமா ரசிகர்களை தனது காமெடியால் சிரிக்க வைத்த பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் நடித்த லத்திகா படமும் மார்ச் 18ஆம் தேதி தான் வெளியாகி இருக்கிறது. இந்த படங்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு
நீதிக்கு தலைவணங்கு
பி. நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர் - லதா இணைந்து நடித்து 1976இல் வெளியான படம் நீதிக்கு தலைவணங்கு. தெலுங்கில் 1973இல் வெளியாகி ஹிட்டடித்த நேரமு சிக்சா என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் எம்.என். நம்பியார், விகே ராமசாமி, தேங்காய் சீனிவாசன், எஸ் வரலட்சுமி, புஷ்பலதா ரோஜா ரமணி உள்பட பலரும் நடித்திருந்தார்கள்.
படத்தின் ஒரு காட்சியில் லதா, கால் தடுமாறி தண்ணீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். எம்ஜிஆர் அவரை காப்பாற்றியதுடன் ஸ்டண்ட் மாஸ்டரை இந்த விஷயத்தை கடிந்து கொண்டார். க்ளைமாக்ஸில் லதாவை எம்ஜிஆர் காப்பாற்றும் 2 நிமிட காட்சியை மூன்று வெவ்வேறு லெக்கேஷன்களில் படமாக்கியுள்ளனர்.
எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றன. எம்ஜிஆர் சிஎம் ஆவதற்கு முன்பு வெளியான இந்த படம் ஹிட்டானதுடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் வரவேற்பை பெற்றது.
என்னைப்போல் ஒருவன்
டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்து 1978இல் வெளியான படம் என்னைப்போல் ஒருவன். 1957இல் வெளியான பெங்காலி படமான தாஷர் கர் என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் கதையின் நாயகிகளாக சாரதா, உஷா நந்தினி ஆகியோர் நடித்திருப்பார்கள். ஆர். எஸ். மனோகர், எம்ஆர்ஆர் வாசு, சுருளிராஜன் இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததோடு சராசரி ஹிட் படமாக மாறியது.
படம் 1976ஆம் ஆண்டிலேயே முடிவடைந்த போதிலும் இரண்டு ஆண்டுகள் தாமதமாக 1978இல் தான் வெளியானது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் படத்தின் பாடல்கள் அந்த காலகட்டத்தில் ஹிட்டடித்தன. சிவாஜியின் நடிப்பு வெகுவாக பேசப்பட்ட படங்களில் ஒன்றாக என்னைப்போல் ஒருவன் படம் இருந்து வருகிறது
லத்திகா
ஆர். பரதன் இயக்கத்தில் பவர் ஸ்டார் டாக்டர். சீனிவாசன், மீனாட்சி கைலாஷ், ரஹ்மான் உள்பட பலர் நடித்து 200 நாள்கள் வரை ஒரு பிரபல திரையரங்கில் ஓட வைக்கப்பட்ட படம் லத்திகா. படத்தை சீனிவாசனே தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
சினிமா மீதான ஆசையால் டாக்டர். சீனிவாசன் இந்த படத்தை உருவாக்கியதோடு, நடிகராகவும் மாறியுள்ளார். 2011இல் வெளியான இந்த படம் அப்போது ட்ரோல் மெட்டீரியலாக இருந்தது. அதேபோல் சீனிவாசன் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் அழைக்கப்பட்டு நய்யாண்டியும் செய்யப்பட்டார். இருப்பினும் அதை கூலாக ஹேண்டில் செய்த சீனிவாசன் பின்னாளில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் மாறி சில படங்களில் தோன்றினார். அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படங்களில் ஒன்றாக லத்திகா இருந்து வருகிறது.
