ARTICLE AD BOX
மார்ச் 18, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் பாலசந்தர் இயக்கத்தில் சிறந்த கிளாசிக் திரைப்படமான நூற்றுக்கு நூறு வெளியானது. இது தவிர அர்ஜுன், ஜீவா போன்றோர் ஹிட் படங்களும் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படங்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு
நூற்றுக்கு நூறு
மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் ஜெய்சங்கர், லட்சுமி, நாகேஷ், ஸ்ரீவித்யா, ஜெமினி கணேசன், ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக 1971இல் வெளியான படம் நூற்றுக்கு நூறு.
கல்லூரி பேராசிரியராக இருக்கும் ஜெய்சங்கருக்கு திருமணம் நடக்க இருக்கும் நிலையில் மூன்று கல்லூரி பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். இதன் பின்னணி என்ன, இதிலிருந்து ஜெய்சங்கர் எப்படி மீள்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொன்ன படம் நூற்றுக்கு நூறு.
மாணவர்கள் எல்லாம் ஜெய்சங்கர் பக்கம் நிற்க, சந்தர்ப்பங்கள் அவரக்கு எதிராக இருக்க திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் செல்லும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆக்சன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜெய்சங்கர் இந்த படத்தில் சீரியஸான வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
வி. குமார் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படம் பின்னாளில் இந்தியில் இம்திஹான் என்ற பெயரில் வினோத் கன்னா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
சங்கர் குரு
எல். ராஜா இயக்கத்தில் அர்ஜுன், சீதா, சசிகலா, பேபி ஷாலினி, சரத்பாபு உள்பட பலர் நடித்து ஆக்சன் திரைப்படமாக 1987இல் வெளியான படம் சங்கர் குரு. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படமாக்கப்பட்ட ரிலீஸ் செய்யப்பட்டது. தெலுங்கி சின்னாரி தேவதா என்ற பெயரில் ரிலீசானது. படம் இரண்டு மொழிகளிலும் கமர்ஷியல் வெற்றி படமாக மாறியது.
பெங்காலி படமான ஷாத்ரு படத்தை ரீமேக் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ரீமேக் ரைட் அதிகமாக இருந்த காரணத்தால் கைவிடப்பட்டது. இருப்பினும் அந்த படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் மட்டும் அனுமதி பெற்று அதை வைத்து புதிய கதை உருவாக்கி தயாரான படம் சங்கர் குரு. அர்ஜுன் ஹீரோவாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது இந்த படம். அதேபோல் பேபி ஷாலினி (அஜித்தின் மனைவி, முன்னாள் ஹீரோயின்) நடிப்பும் விமர்சகரீதியாக பாராட்டை பெற்றது.
சந்திரபோஸ் இசையில் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. காக்கிசட்டை போட்ட மச்சான் என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கும் பாடலாக மாறியது. 1987இல் வெளியாகி ஹிட்டான படங்களில் ஒன்றாக சங்கர் குரு இருந்து வருகிறது
கச்சேரி ஆரம்பம்
திரைவாணன் இயக்கத்தில் ஜீவா, பூனம் பாஜ்வா, ஜே.டி. சக்கரவர்த்தி, வடிவேலு, சிவரஞ்சனி உள்பட பலர் நடித்து ஆக்சன் காமெடி படமாக 2010இல் ரிலீசான படம் கச்சேரி ஆரம்பம். ராமநாதபுரம் பின்னணியில் ஹீரோ மற்றும் வில்லன் இடையிலான மோதலை அடிப்படையாக கொண்ட கதையம்சத்தை கொண்ட இந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகின. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய இந்த படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி படமாக மாறியது.
டி. இமான் இசையில் கச்சேரி கச்சேரி, கடவுளே கடவுளே, வித்தை வித்தை, வாடா வாடா போன்ற பாடல்கள் ரிப்பீட் மோடில் கேட்கப்பட்டன. ஜீவாவின் ஹிட் பட வரிசையில் ஒன்றாக கச்சேரி ஆரம்பம் படம் இருந்து வருகிறது.
